இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடை- ஏன் இந்த நடவடிக்கை..?


நேபாளத்தில் உயர் மதிப்பு கொண்ட 200, 500, இரண்டாயிரம் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

புழக்கத்தில் ரூபாய்

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த பலரும் இந்தியாவில் வேலை பார்க்கின்றனர். அதேபோல், இந்திய சுற்றுலாப் பயணிகள் பலரும் அங்கு செல்கின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள் அங்கு புழக்கத்தில் உள்ளன. 100, 200, 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அங்கு பொருட்களை வாங்க முடியும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

பண மதிப்பிழப்பு நடவடிக்கை முன்பிருந்தே அங்கு 100, 500 மற்றும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்தன. அதன்பின் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதும் அவை அங்கு பயன்பாட்டில் இருந்த வருகிறது.

பண மதிப்பிழப்பால் இந்தியர்களைப் போல் நேபாள மக்களும் பெரும் பாதிப்புகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

திடீர் தடை

இந்த நிலையில், உயர் மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோட்டா பேசுகையில்,


“நேபாள மக்கள், 100 ரூபாய்க்கு மேற்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என அரசு கேட்டுக்கொள்கிறது. அவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை அல்ல” என்று தெரிவித்தார்.

சுற்றுலா பாதிப்பு

நேபாளத்தில் சுற்றுலா வருபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 மாதத்தில் மட்டும் இரண்டு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்த தடைக்குப் பிறகு நேபாளம் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் வேலை பார்க்கும் அந்நாட்டினர் மின்னணு பரிவர்த்தனையில் தங்கள் பணத்தை வீட்டுக்கு அனுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை?

இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் அதிக அளவில் கள்ள நோட்டாக அச்சடிக்கப்படுவதால் இது போன்ற நடவடிக்கையை எடுக்க இந்திய அரசு முன்பு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!