இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவிற்கு பதிலாக கரு.ஜெயசூரியா நியமிக்கப்படலாம்..!!


இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் சர்ச்சைக்குரிய இந்த அறிவிப்பால் அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது.

விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் பிரதமர் பதவிக்கு உரிமை கொண்டாடினார்கள். 225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையான 113 எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. அதேசமயம் விக்ரமசிங்கேவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ந்தேதி அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும், ஜனவரி 5-ந்தேதி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 20 மாதங்கள் உள்ள நிலையில் அதனை கலைத்ததை ஏற்கமுடியாது என இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. கொழும்பு அரசிதழில் கூறியுள்ளபடி நாடாளுமன்றம் தனது 4-ம் ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பு அதிபரால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதன்மூலம் இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டது.

இந்நிலையில், புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமராக ரணில் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக மீண்டும் நியமிக்கப்போவது இல்லை என்பதில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரியாவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா, ரணிலை இனி ஒருபோது பிரதமராக நியமிக்க போவதில்லை என கூறியிருந்தார். அத்துடன், ரணில் இல்லாது வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!