ஆப்பிரிக்கா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த காந்தி சிலை நீக்கம்..!!


20 ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர்களில் காந்தியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதற்காக அவர் அறியப்படுகிறார்.

காந்தி தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள மக்களுக்காக போராடினாலும் கூட, கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்த போராட்டங்களும் நடைபெற்றது.

தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் இனவெறி மிக்க வார்த்தையை (கபீர்ஸ்) பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை விட மேலானவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என சர்சை எழுந்தது.

2016-ல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் காந்தி சிலை ஒன்றை திறந்து வைத்து இருந்தார். அது திறந்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

அகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தகவலை உறுதிசெய்த பல்கலைக்கழக நிர்வாகம், சிலையை இடம் மாற்றிய சம்பவத்துக்கு வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!