‘கஜா’ புயல் பாதிப்பால் குடிநீர் கிடைக்காமல் 4 நாட்களாக பரிதவிக்கும் கிராம மக்கள்..!


கஜா புயல் தாக்குதலால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

புயலில் சிக்கி 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நாசமானதோடு, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. இதுதவிர பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு இருந்த நெல், வாழை, கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்வதறியாது தவித்துப்போய் இருக்கிறார்கள்.

புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்க மோட்டார்களை இயக்க மின்சாரம் இல்லாததால் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். பால் கிடைக்காமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. புயல் தாக்கி 4 நாட்களாகியும் ஏராளமான கிராமங்களில் இந்த அவல நிலை நீடிக்கிறது.

வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த மழையுடன் புயல் தாக்கியது. மறுநாள் காலையில் பல பகுதிகள் நாசமானது தெரிய வந்தது.

ஆனால் சாலைகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து கிடந்ததாலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும், உள்பகுதிகளில் உள்ள கிராமங்களில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் சாலைகளில் கிடந்த மரங்களையும், மின்கம்பங்களையும் அகற்றிவிட்டு சென்று பார்க்கும்போதுதான், புயலின் கோர தாண்டவத்தில் ஏராளமான கிராமங்கள் உருக் குலைந்து போய் இருப்பது தெரிய வந்தது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்து வருகிறது. என்றாலும் பெருமளவில் ஏற்பட்ட நாசத்தை குறுகிய நாட்களில் சரி செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும், நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறி பல இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும், நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறி பல இடங்களில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சீரமைப்பு பணிகள் சரிவர நடைபெற வில்லை என்றும், 4 நாட்கள் ஆகியும் குடிநீர், மின்சாரம் கிடைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறும் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்கப்படுவதாக தெரிவித்தனர்.


குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே ஜெனரேட்டர் அனுப்பப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட கறம்பக்குடி, சூரக்காடு, சுக்கிரன்விடுதி, மழையூர், வெட்டன்விடுதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் சிலர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதேபோல் அறந்தாங்கி அருகே பெருங்காடு கடைவீதியிலும், புதுக்கோட்டை-அண்டக்குளம் சாலையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நேற்று 13 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜெனரேட்டர்கள், சரக்கு ஆட்டோக்கள் மூலம் கிராம பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, கல்லக்குடி நால்ரோடு, வெட்டிக்காடு ஊரணிபுரம் உள்ளிட்ட 14 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட 31 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். திருத்துதுறைப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் ஆற்றுப்பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 3 வேளையும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

நாகை மாவட்டத்தில் மருதூர், தானிகோட்டகம் உள்ளிட்ட 12 கிராமங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை-கோவில்பட்டி சாலை, திருச்சி-திண்டுக்கல் சாலை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் ஏற்றிக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகள் மன்னார்குடியை தாண்டியபோது விளக்குடியில் மறியல் போராட்டம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன. பல மணி நேரம் மறியல் போராட்டம் நீடித்ததால் குடிநீர் லாரிகள் சாலை ஓரம் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிவாரண பணிகள் இன்னும் முடிவடையாததால் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!