அறைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப்..!


குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அறைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி பறக்கவிட்டு டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில், போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது. இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.

பின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 முறை எம்.பி. பதவி வகித்து உள்ளார்.

இதற்கிடையே, மூளையில் புற்றுநோய் தாக்கியதால் சிகிச்சை பெற்று வந்த மெக்கைன் கடந்த 25-ம் தேதி காலமானார். இதனால், நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசிய கொடி வெள்ளை மாளிகை உள்பட அனைத்து இடங்களிலும் சனிக்கிழமை அன்று அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.


ஆனால், ஒரே கட்சியை சேர்ந்த டிரம்பிற்கும் மெக்கைனுக்கும் கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் நடந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டிரம்ப், அனைவரும் நினைப்பது போல் மெக்கைன் போர் நாயகன் எல்லாம் இல்லை என அவரை தாக்கி பேசியுள்ளார்.

ராணுவ தலைமையகமான பெண்டகன், அமெரிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் வெள்ளை மாளிகை போன்ற இடங்களில் நேற்று முன்தினம் முழுவதும் அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அமெரிக்க கொடியை தனது முன் விரோதம் காரணமாக நேற்று மீண்டும் முழுக்கம்பத்தில் பறக்கவிட்டார் டிரம்ப்.

டிரம்பின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ராணுவ வீரர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

பின்னர் அவர்களின் அழுத்ததிற்கு அடிபணிந்த டிரம்ப், ’தனக்கும் மெக்கைனுக்கும் கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த நாட்டிற்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளை நான் மதிக்கிறேன். மெக்கைனை கௌரவிக்கும் விதமாக அவரது உடல் அடக்கம் செய்யப்படும் தினமான செப்டம்பர் 2-ம் தேதி வரை அமெரிக்க தேசிய கொடிகள் அறைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்’ என நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே சனிக்கிழமை அறைக் கம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடியை ஞாயிறு அன்று முழுக் கம்பத்தில் பறக்க விட்டு பின்னர், நேற்று மீண்டும் அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!