இரவில் நீண்ட நேரம் டி.வி. கணினி பாவிப்பவரா..? இதப் படித்தால் ஷாக் ஆயிடுவீங்க..!


நீண்ட நேரம் டி.வி., கணினியின் நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாம் பெரும்பாலும் கணினியில் பணி செய்கிறோம், டி.வி.யில் பொழுது போக்குகிறோம். அல்லது ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகிறோம். எல்லாவிதமான எலக்ட்ரானிக் கருவிகளின் திரைக் காட்சிகளும் நீல நிற ஒளியை உமிழ்கின்றன. இருட்டில் இந்த நீல ஒளியை நேரடியாக பார்க்கலாம். நீண்ட நேரம் இந்த நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள டோலிடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியளார்கள் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆய்வின் பயனாக, எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளி கருவிழியை பாதிப்பதோடு, அதன் லென்ஸ் பகுதியை நிறங்களை எதிரொளிக்க முடியாமல் செய்துவிடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக நமது விழித்திரையே ஒளியை உணரும் பகுதியாக உள்ளது. இதுவே காட்சி தகவல்களை மூளைக்கு கடத்தி காட்சியைக் காணவும் துணை செய்கிறது. விழித்திரை செல்கள் தொடர்ந்து ஒளி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பினால்தான் நம்மால் காட்சிகளை காண முடியும். விழித்திரை இல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஏற்பி செல்கள் இணைந்து செயல்படாது.


எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது ஏற்பி செல்களை அழியச் செய்வதோடு, சில வேதிப்பொருட்களை சுரந்து விழித்திரையை பாதிப்படையச் செய்கின்றன. இந்த ஏற்பி செல்கள் மறுபடியும் உற்பத்தி ஆகாத செல்கள் என்பதால் ஒருமுறை இழந்தால் பார்வையை இழந்ததற்கு சமம்தான்.

வழக்கமாக வயதாகும்போது இந்த ஏற்பி செல்கள் மெதுவாக அழிந்து கொண்டே வருவதுதான், முதியவர்களின் பார்வை குறைபாட்டிற்கு காரணமாகும். எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது வயது மூப்பு செயலைவிட வேகமாக ஏற்பி செல்களை அழித்துவிடுகிறது. ஆனால் இந்த பாதிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் கணினி பார்க்கும் பழக்கமுடையவர்களுக்கே விரைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிர்ஷ்டவசமாக நீல ஒளியைப்போல வேறு நிறங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற ஒளியலைகள் விழிசெல்களை இவ்வளவு தீவிரமாக பாதிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி கணினி மற்றும் டி.வி. ஒளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இருந்தாலும் செல்போன்களும், டேப்லட்களும் இதே வகையில் பாதிப்பை உருவாக்கும் என்றே அவர்கள் கருது கிறார்கள். அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த பாதிப்புகளில் இருந்து கண்களைக் காத்துக் கொள்ள ஆராய்ச்சியாளர்கள் 2 எளிய வழிகளையும் சொல்கிறார்கள். முதலாவது வழி குறைந்த வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் திரைகளை பார்க்காமல் இருப்பது. அதாவது பகல் வெளிச்சத்தில் இந்த கருவிகளை பார்ப்பதால் அவ்வளவு தீவிரமாக கண்கள் பாதிப்படையாது என்கிறார்கள். இரண்டாவதாக ‘வைட்டமின்-இ’ உருவாக்கும் ஒருவகை நோய் எதிர்பொருளான ஆல்பா டோகோபெரல் இந்த செல்கள் பாதிப்படைவதை கட்டுப்படுத்தும். எனவே ‘வைட்டமின்-இ’ நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்விரு வழிகளில் நீலநிற ஒளியில் இருந்து கண்களை காப்பாற்றலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!