போலீசாருடன் ஓவராக எகிறிய தொழிலதிபர் மகனுக்கு நேர்ந்த விபரீதம்..!


நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று மதியம் கலெக்டர் அலுவலக சந்திப்பில் தெற்கு பகுதி நோக்கி வாகனங்கள் சென்றதால் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக செல்போனில் பேசிக்கொண்டே வேகமாக வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

முதலில் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாரை இடிப்பது போல தனது வண்டியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை தட்டிக் கேட்டனர். ஆனால் வாலிபர் திடீரென போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் அந்த வாலிபரை தடுக்க முயன்றார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யரையும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் குமரி காலனியை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் ஸ்ரீநாத் (வயது 32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!