டெல்லியில் பயங்கரம் – கல்லூரி மாணவர் உயிரைப் பறித்த டேட்டிங் ஆப்..!


டேட்டிங் ஆப்பில் ஏற்பட்ட நட்பு, ஒரு கல்லூரி மாணவரின் உயிரையே பறித்துள்ள சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில், வியாழக்கிழமையன்று கல்லூரி மணவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், தற்போது அந்த மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டெல்லி துவாரகாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர், ஆயுஷ் நாட்டியால். இவர், கடந்த வியாழக்கிழமையன்று கல்லூரிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

மாணவர் ஆயுஷ் காணாமல்போன அன்று, அவர் செல்போனிலிருந்து மாணவரின் குடும்பத்தாருக்கு தொடர்ந்து மெஸ்சேஜ்கள் வந்தவண்ணம் இருந்துள்ளன. அதில், ”ஆயுஷ் கடத்தப்பட்டுள்ளான்; 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அவனை விட்டுவிடுவோம்” எனத் தகவல் வந்திருந்தது. அதை ஏற்று, கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு ஆயுஷின் குடும்பத்தார் பணத்துடன் சென்றுள்ளனர். ஆனால், பணத்தை எடுக்க யாரும் வரவில்லை. இதேபோன்று, இரண்டு மூன்று இடங்களை கடத்தல்காரர்கள் கூறியும், அங்கு வந்து அவர்கள் பணத்தை எடுக்க வரவில்லை.


இதைத் தொடர்ந்து, நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஆயுஷ் சடலமாக ஒரு டிராவல் பேக்கில் கண்டெடுக்கப்பட்டார். இது, மாணவரின் குடும்பத்தையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. கடத்தப்பட்ட மாணவன் எப்படி கொலைசெய்யப்பட்டு இறந்தான் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தத் தொடங்கினர். அப்போது, மாணவர் கடத்தப்பட்டதாக வந்த மெஸ்சேஜை வைத்து விசாரணை மேற்கொள்ளும்போது, ஆயுஷை டேட்டிங் ஆப்பில் உள்ள ஒரு நண்பரே கொன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர் ஆயுஷ், தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல், அதிகமாக டேட்டிங் ஆப் பயன்படுத்திவந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், அதற்கு அடிமையான அவர், அதை அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார். இந்த ஆப்பின் மூலம் பழக்கமான இஷ்தியாக் அலி என்பவருக்கும் ஆயுஷுக்கும் ஏற்பட்ட சண்டையில் இஷ்தியாக், ஆயுஷின் தலையில் சுத்தியால் பலமாகத் தாக்கியுள்ளார். அதனால், ஆயுஷ் அதே இடத்திலேயே விழுந்து இறந்துள்ளார். அவரின் உடலை மறைக்க நேரம் தேவைப்பட்டதனாலேயே, ஆயுஷின் போனிலிருந்து அவரின் குடும்பத்தாருக்கு மெஸ்சேஜ் அனுப்பியுள்ளார் இஷ்தியாக். இதையடுத்து, இஷ்தியாக் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!