பிரியங்கா சிறைக்கு சென்று கொலையாளிகளை ஏன் சந்திக்க வேண்டும்..? – சு.சாமி கேள்வி..!


எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். காலங்கடந்த அவரது இந்த கருத்து அரசியல் ஆதாயத்துடன் வெளியிடப்பட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தியை பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி கொன்று விட்டார்கள் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுப்ரமணியசாமி கூறியதாவது:-

ராஜீவ் காந்தியை ஏன் கொன்றோம்? என்று முன்னர் விடுதலைப் புலிகள் கூறிய காரணத்தில் எங்களுக்கு எதிராக போரிட இந்திய ராணுவத்தை அனுப்பியதால் கொன்றோம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகளுடன் எங்கள் ராணுவத்தால் தனித்து போரிட முடியவில்லை. உதவிக்கு உங்கள் ராணுவத்தை அனுப்புங்கள் என்று இலங்கை அரசு கேட்டு கொண்டதால், நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு ராஜீவ் காந்தி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகளுக்கு காட்டப்படும் கருணை அவரது படுகொலையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறும் ராகுல் காந்திக்கு தேசபக்தி குறைவு என்பதையும் காட்டுகிறது.


ராஜீவ் காந்தி ஒரு உண்மையான தேசியவாதி. அவரது வாழ்நாளில் முக்கியமான காலகட்டத்தில் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு கருணை காட்டவோ, மன்னிக்கவோ கூடாது.

வெளிநாட்டினருடன் சேர்ந்து நமது முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு நாம் ஏன் கருணை காட்ட வேண்டும்? என்பது எனக்கு புரியவில்லை. ஆரம்பத்தில், இந்த கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆயுள் தண்டனையாக தண்டனை குறைக்கப்பட்டது. இந்த தண்டனை நமது நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, அவரது தந்தையை கொன்றவர்களுக்கானது அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்தில் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ‘புரிதல்’ உள்ளதாக தோன்றுவதால் இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தண்டனை அனுபவித்து வருபவர்களின் உறவினர்கள் மட்டுமே அவர்களை சிறையில் சந்திக்க முடியும். அவர்களது உறவினராக இல்லாத பிரியங்கா காந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளை ஏன் சென்று சந்திக்க வேண்டும்?

மேலும், நளினியின் மகள் இங்கிலாந்தில் படிக்க தேவையானவற்றை சோனியா காந்தி கவனித்து கொண்டார். இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் படிப்பதற்காக நளினிக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏன் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறார்கள்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்.

மேற்கண்டவாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!