2 மகள்களுடன் தாய் விபரீதமுடிவு – உருக்கமான கடிதம் சிக்கியது!

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன்.

அவரது மனைவி அனிதா (45). மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16). இவர்கள் கோயமுத்தூரில் வசித்துவந்த நிலையில், ஏசுதாசன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே அங்கு ஆதரவின்றி தவித்த அனிதா மற்றும் 2 மகள்களும் தங்களது சொந்த ஊருக்கே வந்து விட்டனர்.

சகாய திவ்யா இங்குள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான சகாய திவ்யா, தான் இதற்கு முன்பு படித்த பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

சகாய பூஜா மவுலிகா அழகப்பபுரம் பகுதியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கணவர் இறந்த சோகம் மற்றும் கவனிக்க ஆள் இல்லாததால் அனிதா மிகவும் மன வருத்தத்துடன் இருந்து உள்ளார். இதனாலேயே அடிக்கடி நோய்வாய்ப்பட்டுள்ளார்.

பல மருத்துவமனைகளில் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் அதிகமாக நோய்வாய்ப்பட்டதால் எங்கே நாம் இறந்துவிடுவோம் என்று அனிதா பயந்துள்ளார்.

மேலும் தான் இறந்துவிட்டால் தனது 2 மகள்களையும் கவனித்துக்கொள்ள யாரும் முன்வரமாட்டார்கள் என மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் அனிதாவின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. எப்போதும் காலையிலேயே அனிதா விழித்துக்கொண்டு வாசல் தெளிக்க வெளியே வருவார்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு தகவல்தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. உடனே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள ஒரு அறையில் அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அறையில் இருந்து ஒரு உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

இதற்கிடையே வீட்டின் முன்பு குவிந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் அனிதா மற்றும் அவரது 2 மகள்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். 2 மகள்களுடன், தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘மகள்களுக்கு பாதுகாப்பில்லை’: 3 பேரும் தற்கொலை செய்த அறையில் அனிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே நான் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளேன்.

ஒருவேளை நான் தற்கொலை செய்துவிட்டால் எனது மகள்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அனாதையாக இருக்கும் மகள்களை கவனிக்க யாரும் வரமாட்டார்கள். எனவே நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்கிறோம் என எழுதியிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விஷம் குடித்தார்களா?: 3 பேரும் தூக்கில் தொங்கிய அறையில் எலி மருந்துகளும், தூக்க மாத்திரைகளும் ஆங்காங்கே கிடந்துள்ளது.

எனவே 3 பேரும் முதலில் தூக்கமாத்திரையை சாப்பிட்டோ அல்லது எலி மருந்தை குடித்துவிட்டோ அதன் பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்தார்களா? என்பது 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!