வெட்ட வெளியில் நடந்து செல்லும் போது வானிலிருந்து காகிதங்கள், கற்கள் மற்றும் இலைகள் போன்றவை ஒருவர் மேல் விழுவது சகஜம்.
ஒரு சிலரை மின்னல் தாக்கியதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் அபூர்வமான தாக்குதலுக்கு உள்ளானார் அமெரிக்காவில் ஒரு பெண்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி.
தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு சொந்தமான பட்டறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது பெக்கி திறந்த வெளியில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது பெக்கியின் மீது வானத்திலிருந்து திடீரென ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்த போதுதான் அது ஒரு பாம்பு என அவர் உணர்ந்தார்.
உடனே பயத்தில், “கடவுளே காப்பாற்று” என அலறியவாறே அவர் அதனை உதறி தள்ள முயற்சித்தார். ஆனால் பாம்பு பெக்கியின் வலது கையை சுற்றி கொண்டு அழுத்தியது. பெக்கி கத்திக் கொண்டே கைகளை காற்றில் உயர தூக்கி உதறிக் கொண்டேயிருந்தார்.
ஆனால் பாம்பு அவரை விட்டு விலகாமல் அவர் முகத்தை தாக்கியது. அவர் அணிந்திருந்த கண்ணாடியையும் தாக்கியது. சிறிது நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு பழுப்பு-வெள்ளை நிற கழுகு, பெக்கியின் கையை தாக்கியது.
இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானார் பெக்கி. அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார். தான் கவ்விக் கொண்டு போன பாம்பை தவற விட்டதால் அந்த பாம்பு பெக்கி மேல் விழுந்திருக்கிறது.
பெக்கியின் கையிலிருந்த தனது உணவான அந்த பாம்பை பிடுங்குவதற்காக கழுகு அவர் கையை, தனது கால் நகங்களால் பிராண்டி, குத்தி காயங்களை ஏற்படுத்தியது.
ஒரு வழியாக அந்த கழுகு கடைசியில் அவர் கையிலிருந்து அதன் இரையை மீட்டு கொண்டு பறந்தது. உடனடியாக அவர் கணவர், பெக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
கழுகின் கால் நகங்களாலும் அலகாலும் ஏற்பட்ட காயங்களுக்கு பெக்கி அங்கு சிகிச்சை பெற்றார். பாம்பு தாக்கியதால் அவர் அணிந்திருந்த கண்ணாடி மிகவும் சேதமடைந்திருந்தது.
இச்சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: “இது மிகவும் மோசமான தாக்குதல். நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். இச்சம்பவம் நடந்ததிலிருந்து எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை.
பாம்பை கழுகு கவ்வி கொண்டு செல்வதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் இச்சம்பவம் எனக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும்.” இவ்வாறு பெக்கி தெரிவித்தார்.
பாம்பு, கழுகு என இரு வகை உயிரினங்களால் ஒரே நேரத்தில் பெக்கி தாக்கப்பட்டதும் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறித்து பலரும் வியந்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!