தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயது மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
உடல் நலிவுற்ற நிலையில் இருந்த கோகுலின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 6-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
பன்னீர்செல்வம் உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கோகுல் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய தாத்தா இளங்கோ (75) மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் வந்ததை அடுத்து இளங்கோவின் கைகளில் மின்சாரம் தாக்கவே அச்சத்தில் மின்கம்பியை தூக்கி வீசியதாகவும், மின்வயர் கோகுல் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கோகுல் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு கோகுல் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோகுலின் தாத்தா இளங்கோ வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயதே ஆன மகன் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவமும், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் காமேஷ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!