வெப் திரைவிமர்சனம்!

போதை பழக்கத்தால் சீரழியும் 4 பெண்கள் குறித்த கதை.

ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 4 இளம்பெண்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி இரவு நேரங்களில் கிளப்பில் வீக் என்ட் பார்ட்டியில் மது மயக்கத்தில் ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருந்து வருகின்றனர்.

ஒருநாள் இரவு பார்ட்டி முடிந்து மதுமயக்கத்தில் காரில் செல்லும் போது மர்ம நபரால் கடத்தப்படுகின்றனர். அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதி கதை. படத்தின் முக்கால் பகுதி வரை பெண்களை கொடுமைப்படுத்தும் சைக்கோ வில்லனாகவும், கிளைமேக்சில் ஹீரோவாகவும் மாறும் ‘நட்டி’யின் நடிப்பு மனதில் நிற்க வைக்கிறது.

‘நட்டி’யின் கொடுமைகளை அனுபவித்து பயந்து பதறும் காட்சிகளில் ஷில்பா மஞ்சுநாத் உள்பட 4 பெண்களின் நடிப்பு சிறப்பு. மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைத்து விட்டு செல்கிறார். படத்தின் முதல் பாதி ஒரு கோணத்திலும் இரண்டாவது பாதி இன்னொரு கோணத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹாரூன்.

சாதாரண மையக்கருவை எடுத்துக் கொண்டு அதனை திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்த முடியாமல் இயக்குனர் தடுமாறியுள்ளார்.

படத்தில் சில காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் செல்கிறது. கிளைமேக்ஸ் காட்சியில் இதனை நியாயப்படுத்த முயற்சி செய்துள்ளார். திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்திற்கு பாதிப்பு. போதை பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கை சீரழிவதை சமூகத்திற்கு பாடமாக எடுத்திருப்பதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் கிரிஷ்டோபர் ஜோசப் அவரின் பணியை சரியாக செய்துள்ளார். கார்த்திக் ராஜாவின் இசை படத்திற்கு உதவியுள்ளது. மொத்தத்தில் ‘வெப்’ – சர்வர் டவுன்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!