கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார்.
காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார். இதை அப்படியே புரட்டிப்போட்டது போல இருக்கிறது, அஞ்சுவின் கதை.
உத்தரபிரதேச மாநிலம் கைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த அஞ்சு (வயது 34). இவர் திருமணத்துக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் கணவர் அரவிந்த்குமாருடன் வசித்தார். இந்த தம்பதிக்கு 15 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு அஞ்சுவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் முகநூலில் (பேஸ்புக்) அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை, ஜெய்ப்பூர் நகருக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பிச் சென்றார் அஞ்சு. ஆனால் அவர் சென்றது, பாகிஸ்தானில் உள்ள தனது முகநூல் காதலரை காண்பதற்கு. அதற்காக, குடும்பத்தினருக்கு தெரியாமல், முறைப்படி விண்ணப்பித்து ஒரு மாத விசாவையும் அஞ்சு பெற்றுள்ளார்.
நஸ்ருல்லாவின் சொந்த ஊர், கைபர் பக்துங்வா மாகாணம் அப்பர் திர்மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற குக்கிராமம். அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, 5 சகோதரர்களில் இளையவர். திருமணம் ஆகாதவர்.
நஸ்ருல்லா வீட்டுக்கு சென்று தங்கிய அஞ்சு, அங்கிருந்தபடி, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்தார். ஆனால் ‘தோழி’யான அஞ்சுவை திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறினார்.
ஆனால் ஒரே நாளில் அதிரடியாக காட்சிகள் மாறின. ‘பாத்திமா’ என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய ‘அஞ்சு’, நேற்று மாவட்ட கோர்ட்டில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வக்கீல்கள், போலீசார் முன்னிலையில் முறைப்படி அவரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.
நேற்று முன்தினம், நஸ்ருல்லாவுடன் கைபர் பக்துங்வா சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு. அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கரம் கோர்த்தபடி அந்த ஜோடி உற்சாகமாக உலா வந்தது.
இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தில் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘எனது மகளுடன் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு நேரடித் தொடர்பில்லை.
அவர் மனரீதியாக பிரச்சினை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். என் மருமகன் எளிமையான மனிதர். அவர் மீது தவறு எதுவும் கிடையாது’ என்றார்.
இதற்கிடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அஞ்சு, ‘நான் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். இந்தியாவில் உள்ள எனது உறவினர்களையும், குழந்தைகளையும் ஊடகத்தினர் யாரும் தொந்தரவுபடுத்த வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய மண்ணில், புது வாழ்வை தொடங்கிவிட்டார், ‘பாத்திமா’ ஆகிவிட்ட ‘அஞ்சு’. ஆனால் இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!