கணவரை கொன்று உடலை டிரம்மில் அடைத்து வைத்து விட்டு மனைவி தப்பி ஓட்டம்!

திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வளத்தி கோவிலான் (வயது70).தொழிலாளி. இவரது மனைவி எழிலரசி(50).

இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வளத்திகோவிலான் வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் இருந்தார். இது பற்றி கேட்பதற்காக வீட்டின் உரிமையாளர் நேற்று காலை வந்தார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. வெளியில் பூட்டப்பட்டு, மேலும் வீட்டின் உள் பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.


இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இதுபற்றி திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சமையல் அறையில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை திறந்து பார்த்த போது அதில் வளத்தி கோவிலான் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. உடல் அழுகி மிக மோசமாக காணப்பட்டது.

அவர் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் வீட்டில் உள்ள அறையில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. அவருடன் தங்கி இருந்த மனைவி எழிலரசி மாயமாகி இருந்தார்.

வளத்தி கோவிலானை மனைவி எழிலரசி கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எழிலரசி மட்டும் இந்த கொலையை செய்து இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவருடன் வேறு யாரேனும் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று தெரிகிறது.

வீட்டில் ரத்தம் சிதறி கிடப்பதால் வளத்தி கோவிலானை கொடூரமாக வெட்டி கொன்று விட்டு உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி டிரம்மில் அடைத்து வைத்து விட்டு காதலனுடன் எழிலரசி தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.

வளத்தி கோவிலானுக்கும், எழிலரசிக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் வசித்து வந்த குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் மட்டும் வடமாநில வாலிபர் தங்கி உள்ளார். மற்ற வீடுகள் அனைத்தும் காலியாக உள்ளது.

எழிலரசி வேலைக்கு செல்லும் போது சிலருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக எழிலரசி வேலைபார்த்த கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவருடன் பழகியவர்களிடம் விசாரணைநடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த கொலையில் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்க வில்லை.

எழிலரசி சிக்கினால் தான் கணவர் கொலைக்கான காரணம் என்ன? உதவியவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும். எழிலரசி பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் கடைசியாக யார்? யாரிடம் பேசினார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

கணவரை மனைவியே கொடூரமாக கொன்று உடலை டிரம்மில் அடைத்து தப்பிய சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!