கல்வி மட்டுமல்ல.. கிட்னியையும் தந்த ஆசிரியர் – அமெரிக்காவில் ஆச்சரியம்!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 15-வயதான ரோமன் மெக்கோர்மிக் என்ற மாணவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் (branchiootorenal syndrome) எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தான்.

இதனால் அவன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் காது, சிறுநீரகம் போன்ற உடலுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. அவனால் பிற சிறுவர்களை போன்று உண்ணவோ, விளையாடவோ முடியாமல் இருந்து வந்தது. படிப்படியாக அவனது நிலைமை மோசமாகி சிறுநீரகம் செயலிழந்தது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளி கிடைக்கும் வரை அவனுக்கு டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்ந்து செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டு வருடங்களாக கொடையாளியை அவன் குடும்பத்தினர் தேடி வந்தும் அவனுக்கு பொருத்தமான சிறுநீரக கொடையாளி கிடைக்கவில்லை.

இந்நிலையில் டொலேடோ நகரத்திலுள்ள அச்சிறுவன் படிக்கும் விட்மர் உயர்நிலை பள்ளியின் கணித ஆசிரியர் எட்டி மெக்கார்த்தி அவனுக்கு சிறுநீரகம் வழங்க முன்வந்துள்ளார்.

அவரது சிறுநீரகம் அந்த சிறுவனுக்கு பொருந்துமா என்பதை அறிந்து கொள்ள அவர் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

பிறகு அவர் தகுதியானவர் என்பதை தெரிந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டவுடன் அந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் அவர் செய்தியை தெரிவித்தார்.

“என் வகுப்பில் படிக்கும் நல்ல மாணவன் அவன். அவனுக்கு உதவலாம் என முயற்சி செய்தேன்” என மெக்கார்த்தி கூறினார். இதனையறிந்த மாணவனும் அவன் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

டொலேடோவிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் உள்ள ஆன் ஆர்பர் பகுதியின் மிசிகன் பல்கலைகழக மருத்துவமனையில் அந்த மாணவனுக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!