பூவே பூச்சூட வா பட பாணி விளையாட்டு – அமெரிக்காவில் 3 சிறுவர்கள் பலி!

1985-ம் வருடம் வெளிவந்த “பூவே பூச்சூட வா” எனும் திரைப்படத்தில் சில சிறுவர்கள், ஏதாவது ஒரு வீட்டில் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, அவ்வீட்டின் உள்ளே இருந்து யாரேனும் வெளியே வந்தால், உடனே ஓடிவிடும் “டோர்பெல் டிட்ச்” (Doorbell Ditch) எனப்படும் சுட்டித்தனத்தில் ஈடுபடுவார்கள்.

அமெரிக்காவில் ஜனவரி 19, 2020 அன்று நடைபெற்ற அதே போன்றதொரு சம்பவத்தில் விளையாட்டுத்தனமான ஈடுபட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

இச்சம்பவத்தை துப்பு துலக்கிய கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து துறை தெரிவித்திருக்கும் தகவல்களின்படி, இந்த 3 சிறுவர்களும் அவர்களில் ஒரு சிறுவன் வீட்டில் இரவு தங்கியிருக்கின்றனர்.

அப்போது அதில் ஒருவன் டோர்பெல் டிட்ச் (Doorbell Ditch) விளையாடலாம் என கூறியிருக்கிறான். சம்மதித்த அனைத்து சிறுவர்களும் அருகிலிருந்த மோட்ஜெஸ்கா ஸம்மிட் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு தங்கள் காருக்கு வேகமாக திரும்பியிருக்கின்றனர்.

அவ்வீட்டில் தங்கியிருந்த கலிபோர்னியா பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனுராக் சந்திரா (45), கோபமடைந்து காரில் தப்பிய அந்த சிறுவர்களை தனது காரில் துரத்தி சென்றுள்ளார்.

ஸ்குவா மலை சாலையில் தனது காரின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ.க்கும் மேல் அதிகப்படுத்தி சிறுவர்களின் கார் மீது மோதினார். இதில் காரிலிருந்த 6 சிறுவர்களில் 16 வயதுடைய டேனியல் ஹாகின்ஸ், ஜேக்கப் இவாஸ்கு மற்றும் டிரேக் ரூயிஸ் ஆகிய 3 சிறுவர்கள் அங்கேயே பலியானார்கள்.

18, 14, 13 வயதுடைய மீதம் 3 பேர் காயத்துடன் தப்பித்தனர். இதனையடுத்து ஜனவரி 20, 2020 முதல் ரிவர்ஸைட் பகுதியில் உள்ள ராபர்ட் பிரெஸ்லி தடுப்புக்காவல் மையத்தில் அனுராக் சந்திரா காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மேல் விசாரணை தீர்ப்பு கடந்த 14-ந்தேதி வழங்கப்பட்டது. ரிவர்ஸைட் கவுண்டி பகுதியின் நீதிமன்றத்தில், நடுவர் குழு குற்றவாளி என ஒருமித்த கருத்தை தெரிவித்தவுடன், சந்திராவிற்கு பரோலில் வெளி வர முடியாதபடி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

சில சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தாலும், ஒருவரின் கோபத்தாலும் அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!