முதுகு எலும்புகள், தசைகள், வட்டுகள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றின் கூட்டுக் கட்டமைப்பைக் கொண்டது முதுகுத்தண்டுவடம்.
உடலின் சீரான இயக்கத்துக்கு உதவுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராதது, அதிக கனமான பொருட்களைத் தூக்குவது, திடீர் இயக்கம், தும்மல், இருமல், உடலை முறுக்குதல், நீண்ட நேரம் நிற்பது, இடைவெளியின்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது, கழுத்து முன்னோக்கி இருக்கும்படி உட்காருவது, தொடர் தூக்கம், செய்யும் வேலையின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையினால் கூட முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம்.
இதுதவிர தசைப்பிடிப்பு, குடலிறக்கம், தசை இறுக்கம், இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு அல்லது காயங்கள், தசைநார் இறுக்கம் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.
சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்து குறைபாட்டாலும் முதுகுவலி உண்டாகும்.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தைப்பேறின்போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வலி வரலாம்.
ஷிங்கிள்’ எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் சேதம் ஏற்படுவது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்று, இடுப்பு அழற்சி நோய், காய்ச்சல், முதுகெலும்பு தொற்று ஆகியவையும் முதுகுவலிக்கு காரணமாகும்.
எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ரத்தப் பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டறிய முடியும். 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
வலியைக் குறைக்கும் சிகிச்சைகள், தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். உடற்பயிற்சிகள், உடலின் சமநிலையைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் முதுகுவலி வருவதை தடுக்கலாம்.
ஏரோபிக் பயிற்சிகள், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றை தினசரி செய்வது, முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும். தினசரி காலை உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.
உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கியக் காரணமாகும். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!