12 மாதங்களில் ஆடி என்பது தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. தெய்வீக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக ஆடி மாதம் இன்று வரை இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஆடியில் அம்மனை வேண்டி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும்.
அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று மாலை வீட்டில் எளிதாக அம்மனை வரவேற்பது எப்படி? இதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் முதல் நாளான இன்று விரதம் இருந்து அம்மனை வீட்டிற்கு வரவழைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
காலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீடு தோறும் மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, புத்தாடை ஒன்றை அம்மனுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய ஏதாவது ஒரு வர்ணங்களில் பட்டுடை ஒன்றை அம்மனுக்கு வைத்து வழிபடுவது விசேஷம்.
லலிதா ஸஹஸ்ரநாமம் கட்டாயம் படியுங்கள். பின்னர் தூப, தீப ஆராதனை காண்பித்து அம்மனை இன்முகத்துடன் இல்லத்திற்கு வரவேற்று பூஜையை நிறைவு செய்யுங்கள்.
நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது கற்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றை வைக்கலாம். கட்டாயம் மகாலட்சுமியை வரவேற்க பூஜை அறையில் உங்களிடம் இருக்கும் பணம் மற்றும் நாணயங்களை ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதில் கொஞ்சம் அட்சதை தூவி வையுங்கள்.
இவ்வாறு முறையாக அம்பாளை வீட்டிற்கு வரவேற்று வழிபட்டால் வருடமெல்லாம் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும். மேலும் இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியும் இருக்கும்.
இன்று முதல், இந்த மாதம் முடியும் வரை தினம்தோறும் உங்களுடைய இல்லங்களில் மாவிலை தோரணம் கட்டி, அம்மனுக்கு பூஜைகள் நடை பெற்றால் அடுத்த ஒரு வருடம் வரை உங்களுக்கு அம்மன் துணையாக நின்று காத்தருள்வாள் என்பது நம்பிக்கை.
இம்மாதத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு இல்லாத, இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது, நீர் தானம், கேழ்வரகு கூழ் தானம் ஆகியவற்றை செய்யலாம். இன்று பிறக்கும் ஆடிமாதம் அமாவாசையோடு பிறக்கிறது. அமாவாசை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்.
இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந் தேதி முதல் அமாவாசையும், ஆகஸ்டுமாதம் 16-ந் தேதி 2-வது அமாவாசையும் வருகிறது. இந்த இரு அமாவாசை நாட்களிலும் பித்ரு சர்பபணம் செய்ய வேண்டும். 2-வது அமாவாசை வரும் ஆகஸ்டு 16-ந் தேதி பித்ரு பூஜைகள் செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.
இன்று (ஆடி 1-ம்தேதி) வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்திலும் ஆடி 31-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது. ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர்.
அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.
ஆடி அமாவாசையான இன்று உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!