சாப்பிட்டால் தொண்டையில் உணவு சிக்குவது ஏன்? இதனால் உயிருக்கு ஆபத்தா?

எப்படி சாப்பிட வேண்டும்?',சாப்பிடும்போது செய்யக் கூடியவை, கூடாதவை’ என்பது பற்றி நிறைய கோட்பாடுகளே உள்ளன.

இவை எவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் சாப்பிடும் முறைகளில் காட்டும் அலட்சியம் நம் உயிரையே பறிக்க வாய்ப்புள்ளது.

நம்மில் பேசிக்கொண்டே சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

மேலும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், வேறு ஏதாவது வேலைகளில் கவனத்தைச் செலுத்திக் கொண்டும் சாப்பிடும் நமக்கும் ஆபத்து அருகில்தான் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, சாப்பிடும் முறைகளைப் பற்றியும், அதில் கவனக்குறைவாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

“நம்மில் பெரும்பாலானோர் செய்துகொண்டிருக்கும் தவறு பேசிக்கொண்டே சாப்பிடுவது. மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டு வெவ்வேறு வால்வுகள். உணவுப் பொருள்களை மெல்லும்போது மூச்சுக்குழல் வழியே சுவாசிப்போம்.

அதுவே மென்ற உணவை விழுங்கும்போது உணவுக்குழல் திறந்துகொள்ளும். அதே நேரத்தில் மூச்சுக்குழல் மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக்குழலினுள் செல்லாமல் இருக்க இயற்கையிலேயே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

இதுவே நாம் வாயை மூடி மெல்லாமல் பேசிக்கொண்டே உணவைச் சாப்பிடும்போது நமக்குத் தெரியாமலே வாயின் வழியே காற்று உள்ளே செல்கிறது.

இப்போது மென்ற உணவை விழுங்க முயலும் அந்த வாயில் காற்றும் இருப்பதால் உணவுக்குழல், மூச்சுக்குழல் இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கின்றன.

இதனால் உணவுக்குழலினுள் செல்ல வேண்டிய உணவு வழிதவறி மூச்சுக்குழலினுள் சென்று தொண்டையை அடைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு உணவு தொண்டையில் அடைத்துக்கொண்டவுடன் இயற்கையாகவே ஏற்படும் இருமல் மூலம் அந்த உணவுத்துகள் வெளியில் வந்துவிடும்.

ஆனால், மூச்சுத்திணறல் ஏற்படுத்திய உணவு சரியாக மெல்லப்படாத பெரிய அளவிலானது என்றால் இருமலின்போதும் வெளியில் வராது.

எனவே, நம் சுவாசம் தடைப்படும். முப்பது விநாடிகள் நமது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லவேயில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.

இதனால்தான் மூச்சுத்திணறல் வந்தவர் மயக்க நிலைக்குச் சென்றுவிடுகிறார். இந்த நிலையில் உள்ளவருக்கு முதலுதவி கொடுக்காமல்விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உணவு தொண்டையில் அடைத்துக்கொண்டு அதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது அவருக்கு அருகில் உள்ளவர் உடனே மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் மார்பிலும் கை வைத்து நன்றாக அழுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது நுரையீரலில் உள்ள காற்று வேகமாக வெளிவந்து, அடைத்துள்ள உணவுத்துகளை நீக்க வாய்ப்புள்ளது. மருத்துவத்துறையில் ஹெய்ம்லிச் மனுவர் (Heimlich Maneuver) என்ற சிகிச்சை முறை உள்ளது.

இதில், உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டவரின் கைகளை முதுகின் பின்புறமாக அழுத்திப் பிடித்து அவரின் வயிற்றில் கைவைத்து நன்றாக அழுத்த வேண்டும்.

இப்படிச் செய்யும்போது தொண்டையில் அடைத்திருக்கும் உணவு வெளியில் வர வாய்ப்புள்ளது. இந்த முதலுதவி பயிற்சிகள் தற்போது பொதுமக்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

உணவைக் கவனமாக, நன்றாக மென்று சாப்பிட்டாலே இது போன்ற பிரச்னைகள் வராது. அப்படியும் நாம் சாப்பிடும் உணவு தொண்டையில் அடைப்பதைப் போன்று உணர்ந்தால் தாராளமாகத் தண்ணீர் குடிக்கலாம்.

மேலும், கொஞ்ச கொஞ்சமாகச் சாப்பிட வேண்டுமே தவிர ஒரேயடியாக உணவை வாயில் திணிக்கக் கூடாது. பெரும்பாலும் பேசிக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்த்தல் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!