காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்!

தாய், தந்தையை இழந்த சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். இவரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க அவரது முறைமாமன்கள் முயற்சி செய்கின்றனர்.

இதனிடையே ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை, சித்தி இத்னானி நேரில் சந்திக்க முயற்சி செய்கிறார். சில காரணங்களால் ஆர்யாவை, சித்தி இத்னானியால் சந்திக்க முடியவில்லை.

தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்று ஆர்யா தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன்பின்னர் சித்தி இத்னானியை சந்திக்க, அங்கு இவருக்கும் சிலருக்கும் மோதல் வெடிக்கிறது.

இறுதியில் என்ன ஆனது? ஆர்யாவுக்கும் சித்தி இத்னானிக்கும் என்ன உறவு? ஆர்யாவின் பின்புலம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. கிராமத்து கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார்.

ஆனால் அவர் பேசும் வசன உச்சரிப்பு சில இடங்களில் பொருந்தவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் ஆர்யாவின் உழைப்பு தெரிகிறது. சித்தி இத்னானியை சுற்றியே கதை நகர்கிறது. கிராமத்து பெண்ணாக வரும் சித்தி அழகாக நடித்துள்ளார்.

படத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக கொடுத்து கவனம் பெறுகிறார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, அவரின் முதிர்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஆடுகளம் நரேன் மற்றும் தமிழ் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம்.

பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு அதனை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் முத்தையா.

முதல் பாதியில் கதைக்கு தேவையானதை தாண்டி வரும் சண்டை காட்சிகள், பில்டப்புகளை தவிர்த்திருக்கலாம். முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆர்யாவின் பின்புலத்தை விளக்காமல் சித்தி இத்னானியின் பாதுகாவலர் போன்று பின்னால் சுற்ற வைத்திருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது.

பிளாஷ் பேக் காட்சிகள் சிறப்பு. ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு அழைத்து செல்கிறது. மொத்தத்தில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – பழைய பாணி.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!