வீரன் திரைவிமர்சனம்!

வீரன் சாமியை வழிபடும் கிராமத்தில் நண்பர்களுடன் ஹிப்ஹாப் ஆதி வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் நண்பர்களுடன் ஆதி வீரன் சாமி கோவிலின் அருகில் செல்லும் பொழுது மின்னல் அவரை தாக்கி விடுகிறது. இதனால் சுயநினைவை ஆதி இழந்து விடுகிறார்.

இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக தனது அக்காவுடன் அவர் வெளிநாட்டிற்கு சென்று, பிறகு அங்கேயே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது கிராமத்தில் குழாய்கள் அமைத்து கிராமமே வெடித்து சிதறுவது போன்று ஆதியின் கனவில் தோன்றுகிறது.

இதனால் அவர் கிராமத்திற்கு செல்ல முயற்சி எடுக்கிறார். சிறு வயதில் இவரை தாக்கிய மின்னலால் இவருக்கு ஒரு சக்தி கிடைத்தது. இந்த சக்தியை பற்றி ஆதி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமே தெரியும். கிராமத்திற்கு செல்லும் ஆதி, அங்கு குழாய் அமைப்பதற்காக வீரன் கோவிலை அழிக்க சிலர் முயற்சி எடுப்பது தெரிய வருகிறது.

இதனால் கிராமத்தில் இருக்கும் மக்களை திரட்டியும், தனக்கு கிடைத்த சக்தியை வைத்தும் இதனை முறியடிக்க நினைக்கிறார். இந்த முயற்சியில் ஆதி வெற்றி பெற்றாரா? வீரன் கோவிலை இடிக்க நினைவர்களின் முயற்சியை ஆதி முறியடித்தாரா? என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் ஆதி, நடிப்பில் வித்யாசம் காட்டி ரசிகர்களை கவர்கிறார்.

பல இடங்களில் பார்வையாளர்களின் கைத்தட்டல் பெறுகிறார். இப்படத்தில் ஆதியின் நடிப்பு புது விதமாக தென்படுகிறது. அதிரா ராஜ் திரையில் மிளிர்கிறார். காதல் காட்சிகளில் கவன பெறுகிறார்.

வில்லனாக வரும் வினய் வித்யாசமான நடிப்பை கொடுத்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட்டின் காம்பினேஷன் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மேலும் படத்தில் வரும் பல கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

சூப்பர் ஹீரோ ஃபண்டசி படமாக கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார் இயக்குனர் ஏஆர்கே சரவணன். கிராமத்தின் வாசத்தில் சமூக பிரச்சினையை மக்களுக்கு எளிதில் புரியும் படி கொடுத்துள்ளார்.

நடிகர்களின் தேர்வு படத்திற்கு கூடுதல் பலம். ஒரு சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்தை பாதிக்கவில்லை. சொல்ல வந்த விஷயத்தை படத்தை விட்டு விலகாமல் திரைக்கதையின் மூலம் இயக்குனர் மெருகேற்றியுள்ளார்.

தீபக் டி மேனனின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஹிப்ஹாப் ஆதியின் பாடல்கள் ஓகே. மொத்தத்தில் வீரன் – வித்யாசம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!