கோடையில் உட்கொள்ள வேண்டிய உடல் எடையை குறைக்கும் பானங்கள்!

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தற்போது குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி- கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய பானங்கள் பற்றி பார்ப்போம்!

எலுமிச்சை-வெள்ளரி பானம்: சிறிய வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை அகன்ற ஜாரில் போட்டு இரண்டு டம்ளர் நீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். இந்த சாறினை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது குறைந்த கலோரிகளை கொண்டது. அதனால் உடலில் சேரும் கலோரிகளை கட்டுப்படுத்துவதோடு, நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். இதனை பருகினால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.

லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு லவங்கப்பட்டை, புதினா சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். இரவில் பிரிட்ஜில் வைத்துவிட்டு காலையிலும் பருகலாம். கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பதோடு, எடை குறையவும் உதவும்.

மோர்: பசியின்மை, செரிமான கோளாறு கொண்டவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினைகளை கொண்டவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. மிக்சியில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி அதனுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து, பருகலாம்.

எலுமிச்சை சாறு கலந்த கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க உதவும். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போடவும். அதனுடன் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து பருகலாம். வெறுமனே கிரீன் டீ பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை பழ சாறு சேர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

எலுமிச்சை, இஞ்சி, தேன் பானம்: அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கிவிட்டு தலா ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி பருகவும். உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.

கேரட் – ஆரஞ்சு ஜூஸ்: கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் போன்றவை இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். குறைவாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைப்பதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும். கேரட், ஆரஞ்சு பழம் இரண்டையும் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவேண்டும்.

காய்கறி-பழ ஜூஸ்: கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும். கேரட், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கீரை, பீட்ரூட் போன்றவற்றை ஜூஸாக்கி பருகலாம். அவற்றுடன் சிறிதளவு கல் உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலானவை கிளைசெமிக் குறியீட்டு எண்களை குறைவாக கொண்டிருப்பதால் சர்க்கரை அளவையும் கட்டுக்குள்வைக்கும்.

அன்னாசி லெமனேட் பானம்: அன்னாசி பழத்தில் எடையை குறைக்க உதவும் கொழுப்பு அமில ஆக்சிடென்டுகள் இருக்கின்றன. ஒரு அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழசாறு, சிறிதளவு மிளகு தூள் கலந்து பருகலாம். காலை வேளையில் இந்த பானத்தை பருகுவது எடையை குறைப்பதோடு, புத்துணர்ச்சியையும் தரும்.

பீட்ரூட்-புதினா ஜூஸ்: இரண்டு பீட்ரூட்களை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலை, இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக்கி தேவைக்கு நீர் கலந்து பருகலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதில் நார்ச்சத்தும் அதிகம். வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. குடலை சுத்தம் செய்வதுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!