ஸ்மார்ட்போன் உலகம், தொலை தூரத்தில் வசிப்பவர்களை முகம் பார்த்து வீடியோ காலில் பேசும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரே குடும்பத்துக்குள் இடைவெளியை அதிகப்படுத்தியும் விடுகிறது.
நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு நேரம் கிடைத்தாலும் கூட தங்கள் அறைக்குள் இருந்தபடி செல்போனிலேயே மூழ்கி பொழுதை கழிக்க வைத்துவிடுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மட்டுமல்ல கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பான ஆய்வை நடத்தியது. இந்தியாவை பொறுத்தவரை திருமணமான தம்பதியர்களில் 88 சதவீதம் பேர் அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்கள் உறவை பாதிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.
ஸ்மார்ட்போன் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் திருமணமான தம்பதிகளிடையே நடத்தை மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது திருமணமான இந்திய தம்பதியரில் 67 சதவீதம் பேர், தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும்போது கூட ஸ்மார்ட்போனுடன் இணைந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். ஸ்மார்ட்போன் காரணமாக தங்கள் மனைவியுடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக 66 சதவீத கணவர்கள் தெரிவித்துள்ளனர்.
70 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும்போது தங்கள் மனைவி குறுக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை. செல்போனை பார்த்தபடியே மனைவியின் பேச்சுக்கு தலையாட்டுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
84 சதவீதம் பேர் தங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும், ஆனால் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும், செல்போன் பார்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதால் மனைவியுடன் குறைந்த நேரத்தையே செலவிட முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் மக்களை சோம்பேறிகளாக்குகின்றன என்பதற்கு முரணாக, 55 சதவீதம் பேர் தங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்க ஸ்மார்ட்போன் உதவுவதாக கூறியுள்ளனர். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு உதவியாக இருப்பதாகவும் 59 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!