கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்!

ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என பலவிதமான வேலைகளை செய்வது கல்லீரல். ஆண்களைப் போலவே, பெண்களும் கல்லீரல் தொடர்பான நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களுக்கு கல்லீரலில் உண்டாகும் நோய்களில் முக்கியமானது ‘சிரோசிஸ்’ எனும் ‘கொழுப்பு கல்லீரல் நோய்’. அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படும் வீக்கம் ‘சிரோசிஸ்’ எனப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்துவதாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும், அதிக உடல் எடையாலும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் பி, சி, தாதுக்கள் மற்றும் குளுட்டோதயோனின் நிறைந்த உணவுகள் உதவும். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. காபி: இதில் காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

2. பச்சை இலை உணவுகள்: கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவும்.

3. பருப்புகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.

4. பூண்டு: பூண்டில் உள்ள அல்லிசின், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் நச்சு நீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அல்லிசின் என்பது ஒரு கந்தக கலவை ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்டு மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. செலினியம், இயற்கையாகவே நச்சு நீக்கும் கனிமமாகும். இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

5. பீட்ரூட்: இதில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதனால் நச்சுக் கழிவுகள் விரைவாக உடலில் இருந்து வெளியேறுகின்றன.

மேலும் முட்டை, சிட்ரஸ் பழங்கள், இஞ்சி, மஞ்சள், தேநீர் மற்றும் மீன் போன்ற உணவுகளும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவையாகும். மேலும், சர்க்கரை, ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!