நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்…?

வெளியே மழை பொழிகிறதோ வெயில் அதிகமாக காய்கிறதோ இல்லை குளிர் உடலைத் தாக்குகிறதோ. நாம் மழையையோ வெயிலையோ குளிரையோ நிறுத்த முடியாது.

ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள குடை பிடித்துக் கொள்கிறோம், நிழலை தேடுகிறோம் மற்றும் கம்பளி உடைகளை அணிந்து கொள்கிறோம்..

அதைப் போலத்தான் நம்மை சுற்றிலும் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய் தொற்று கிருமிகள் இருக்கின்றன அவையெல்லாம் நம் மூச்சுக்காற்று மூலமாகவும், உணவு தண்ணீர் மூலமாகவும் நம் உடலுக்குள் சென்று கொண்டு தான் இருக்கும்.

இந்த கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்க இதற்காகத்தான் இயற்கை ஒரு அரணை நமக்கு கொடையாக கொடுத்துள்ளது. அதுதான் நம் நோய் எதிர்ப்பு சக்தி.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை. நம் உடலின் மொத்த உறுப்புகளின், தசைகளின் இணக்கமான ஒத்திசைவே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

எனவே நம் உடலின் எல்லா உறுப்புகளையும் எல்லா தசைகளையும், ரத்த ஓட்டங்களையும், நிணநீர் ஓட்டங்களையும், நரம்புகளையும் நாம் நல்ல முறையில் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நம் உடல் மட்டுமின்றி நம் மனதை மிகவும் முக்கியத்துவத்துடன் நாம் பாதுகாத்து சரியான முறையில் இயக்க பழகிக்கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் துல்லியமாக செயல்படும். சரி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

புகை பிடித்தல்: புகை பிடித்தலை அறவே ஒழிப்போம். ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும் போதும் நம் வாழ்நாளில் ஒரு சில நிமிடங்களை நாம் இழக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புகை பிடிப்பது நம் உடலின் நுரையீரலை மட்டுமின்றி ரத்த ஓட்டங்களையும் பாதிக்கிறது. உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவதை கூட்டுகிறது. இதனால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிப்படைகிறது என்பதை மறுக்க முடியாது.

மேலும் புகைபிடிப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் குடும்பத்தில் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே புகை என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு பழக்கம்: நம் உணவில் நிறைய பழங்களும் பச்சைக் காய்கறிகளும் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் மாவுச்சத்து புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருப்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும்.

உணவை நன்கு ரசித்து நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும். பசி இல்லாத போது எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நிதானமாக சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டாலும் நாம் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

மிதமான உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. துரித நடை பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓட்டம், நடனம் ஆடுதல், யோகாசனம் என்று நம் மனதிற்கு பிடித்த எந்த ஒன்றை வேண்டுமானாலும் செய்யலாம். வாரத்தில் ஐந்து நாட்களாவது இதை கடைபிடிப்பது நல்லது.

சரியான எடை: உடல் பருமன் என்பது பலவிதமான நோய்களுக்கு வழி கோல்வதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.

தூக்கம்: குறைந்தபட்சமாக 7 மணி நேர தூக்கம் ஒருவருக்கு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு இன்னும் சற்று அதிகமான தூக்கம் நல்லது. தூங்கும் இடம் வசதியானதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருப்பது அவசியம்.

உடல் சுகாதாரம்: பலவிதமான நோய்கிருமிகள் சுகாதாரமற்ற சூழலில் பெருகி வளர்ந்து நம்மை தாக்குகிறது. எனவே சமைக்கும் பொருட்களை சுத்தமானதாக தேர்ந்தெடுத்து நன்கு கழுவி சமைப்பது நல்லது. குறிப்பாக இறைச்சி உணவுகளை நீண்ட பொழுது வைத்திருக்காமல் அவ்வப்பொழுது சமைத்து உண்பது நல்லது. சாப்பிடும் முன்பும் வெளியில் சென்று வந்தாலும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

மன உளைச்சல்: மனதை லேசாக அமைதியாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். இதற்கு தியானம் பெரிதும் உதவுகிறது. வீட்டிலும் பணியிடங்களிலும் முடிந்தவரை தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பதும் நல்லது.

உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படும் பொழுது உடனடியாக அதை பேசி தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். நாம் செய்ய வேண்டிய கடமையாக நம் உடலையும் மனதையும் சரியாக ஆரோகியமாக வைத்துக்கொண்டாலே போதும், நம் உடலுக்குள் நுழையும் வேண்டாத கிருமிகளை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம் துணை மற்றும் உதவி இன்றியே துரிதமாக விரட்டி அடித்து விடும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!