ஃபர்ஹானா திரைவிமர்சனம்!

இஸ்லாம் மதத்தை சார்ந்த நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கணவர் ஜித்தன் ரமேஷ், தந்தை கிட்டி மற்றும் குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். வீட்டின் வறுமை காரணமாக கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

குடும்பம் ஓரளவிற்கு முன்னேறும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுகிறார். அங்கு சென்ற பின்னர், அது ஆண்களுடன் நட்பாக பேசும் இடம் என்று ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெரியவருகிறது.

போன் செய்யும் பல ஆண்கள், அவரிடம் ஆபாசமாக பேசுகிறார்கள். இதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உடனே அங்கிருந்து மாற வேண்டும் நினைக்கிறார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் அவருக்கு கால் செய்கிறார். கொஞ்சம் வித்தியாசமாக பேசும் அவரிடம் மனதை பறி கொடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அங்கு வேலை செய்யும் ஐஸ்வர்யா தத்தா, இப்படி போன் பேசிய ஒருவருடன் சென்று உயிரை பறிகொடுக்கிறார்.

இதைப்பார்த்து பயப்படும், ஐஸ்வர்யா ராஜேஷ், மர்ம நபரிடம் பேசுவதை நிறுத்த ஆரம்பிக்கிறார். ஆனால் கால் செய்யும் மர்ம நபர் அவரை விடுவதாக இல்லை.

மிரட்ட ஆரம்பிக்கிறார். இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் மர்ம நபரிடம் இருந்து எப்படி தப்பித்தார்? மர்ம நபர் யார்? ஐஸ்வர்யா ராஜேஷை தொந்தரவு செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. ஃபர்ஹானா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒட்டுமொத்த படத்தையும் தன்னுடைய நடிப்பால் தாங்கிச் செல்கிறார். கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

குடும்ப கஷ்டம், ஆண்களின் வக்கிர புத்தி, செய்த தவறை நினைத்து வருந்துவது, வீட்டுக்கு பயப்படுவது என்று என நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரம் அழகான முறையில் எழுதப்பட்டு இருந்தது. கொடுத்த கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்தையும், நேர்மையையும் அமைதியான முறையில் அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் சிறப்பு.

இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியில் கவர்ந்து இருக்கிறார். குரல் மூலம் பலரை மிரட்டி இருக்கிறார் செல்வராகவன். சிறிய கதையை இஸ்லாம் குடும்பப் பெண்ணையும், அவளது வாழ்வியல் நெறிமுறைகளையும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார். படம் முழுக்க விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நம்மை கட்டி வைத்து விடுகிறார் இயக்குனர்.

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது. மொத்தத்தில் ஃபர்ஹானா சிறந்தவள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!