பத்து தல திரைவிமர்சனம்!

கன்னியாகுமரியில் தொழிலதிபராகவும் பிரபல தாதாவாகவும் இருக்கிறார் ஏஜிஆர் என்கிற சிம்பு. இவர் யாரை சொல்கிறாரோ அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்ற அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை திடீரென சிலர் கடத்தி விடுகின்றனர். முதல்வரை கண்டு பிடிக்க சிபிஐ களம் இறங்கி தீவிரமாக தேடி வருகிறது. முதலமைச்சரை கடத்தியது சிம்புவாக இருக்கும் என்று போலீசும் அவருக்கு நெருக்கடி கொடுக்கிறது.

இதனிடையே கவுதம் கார்த்திக், சிம்புவிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார். போலீஸ் ஒரு புறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் மக்கள் முன் சிம்புவை தவறானவனாக காட்ட துணை முதல்வர் கவுதம் மேனன் தீவிரமாக முயற்சி செய்கிறார்.

இறுதியில் கவுதம் மேனன் போடும் திட்டத்தில் சிம்பு சிக்கி கொள்கிறாரா? முதல்வரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. ஏஜிஆர் கதாப்பாத்திரத்தில் வரும் சிம்பு நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார்.

முதல் பாதியில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றி ரசிகர்களை ஏமாற்றினாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களின் உணர்வுகளுக்கு தீணி போடுகிறார். மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்பு கலக்கி இருக்கிறார். தான் சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் கவுதம் கார்த்திக்.

இவர் பல காட்சிகளின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார். அரசியல்வாதியாக வரும் கவுதம் மேனன் எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் சவுந்தரராஜா. சாயிஷாவின் குத்தாட்டம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

துரோகம், அரசியல், வெறுப்பு, கோபம் என அனைத்தையும் ஒன்றினைத்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா. மாஸ் காட்சிகளின் வழியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

கூட இருப்பவர்கள் துரோகியாக மாறுவதும், உளவாளியான போலீஸ் என பழைய பாணியை பின்பற்றியுள்ளார். திரைக்கதையில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

முதல் பாதியில் சிம்பு சிறிது நேரமே வந்தாலும் இரண்டாம் பாதியில் அதனை சமரசம் செய்து நியாப்படுத்துகிறார். படத்திற்கு கூடுதல் பலமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை அமைந்துள்ளது. பின்னணி இசையில் அட்டகாசம் செய்துள்ளார்.

பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் சாயிஷா ஆடியுள்ள ராவடி பாடல் திணிக்கப்பட்டது போன்று தோன்றுகிறது. ஃபருக் பாஷாவுடைய ஒளிப்பதிவு விருந்து படைத்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் பத்து தல – கெத்து தல.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!