முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் ஒவ்வொரு பருவங்களுக்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிப்பதால் பல பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை.

ஒரு பெண் பூப்பு அடையும் காலம் தொடங்கி, மகப்பேறு காலம், கடைப்பூப்பு காலம் என அனைத்து நிலைகளிலும் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறாள். பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும்.

இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும்.

பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால் அதிகரித்த பசி, எதிலும் நாட்டம் இன்மை, கோபம் போன்றவை ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள், இத்தகைய நேரத்தில் சத்தான உணவினை தவிர்த்து பாஸ்ட்புட்களை உண்பது உடல்நலத்தினை பாதிக்கும் செயலாகும்.

இத்தகைய உணவுப் பழக்கவழக்கங்களினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சினை, சினைப்பை நீர்கட்டி, கருப்பை தசைக்கட்டி போன்றவைகளால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.

முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் எள்ளு மற்றும் கருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரினைப் பருகிவரலாம். மேலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஐந்து நாட்களுக்கு மேல் அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளவர்கள் துவர்ப்புச் சுவை உடைய அத்திப் பிஞ்சு, மாதுளைப் பிஞ்சு, மாதுளை தோல் கஷாயம், வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.

கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!