டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது.

பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன.

இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த, இந்தியா வம்சாவளியான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.

இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார்.

அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். குறிப்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஓராண்டு நிறைவடைவதற்குள் பதவியில் இருந்து பராக் அகர்வால் நீக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. எனினும், பராக் அகர்வாலுக்கு இழப்பீடாக டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து ஏறக்குறைய 42 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று தகவல் வெளியானது.

டுவிட்டரை வாங்குவதற்கு முன்பு, பராக் அகர்வாலுடனான எலான் மஸ்க்கின் தகவல் பரிமாற்றங்கள் திருப்தியாக இல்லை என கூறப்படுகிறது. டுவிட்டர் வாரியத்தில் இணைவது என்பது நேரம் வீணாகும் விசயம் என மஸ்க் குறிப்பிட்டார்.

இதனாலேயே, டுவிட்டரை மஸ்க் வாங்குவது தள்ளி போனது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், டுவிட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியான நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியை மஸ்க் ஈடுபட்டார்.

அவருக்கு ஈடு கொடுக்கும் வகையிலான நபரை தேடும் பணியில் வெற்றியும் பெற்றுள்ளார். இதன்படி, அவர் புதிய சி.இ.ஓ.வை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஆனால், அது ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கி டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறார். மற்ற சி.இ.ஓ.க்களை விட சிறந்த சி.இ.ஓ.வாக தனது பிளாக்கி இருக்கும் என மஸ்க் உணருகிறார்.

இதுபற்றி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள மஸ்க், அதில், சி.இ.ஓ. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது.

அதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் சி.இ.ஓ. என்று எழுதியபடியும் காணப்படுகிறது. அதற்கு முன்னாள் மேஜையில் சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அதன் மேல், கையெழுத்திற்கு பதிலாக பிளாக்கியின் கால் தடங்களும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளன. ஏதேனும் அவசர இ-மெயில் அனுப்ப வேண்டும் என பிளாக்கி விரும்பினால் அதற்கு உதவுவதற்கு ஏற்ற வகையில், டுவிட்டர் லோகோவுடன் கூடிய சிறிய லேப்டாப் ஒன்றும் பிளாக்கியின் முன்னால் உள்ளது.

இந்த புகைப்படம் வெளியிட்டு, டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வை பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என மஸ்க் தெரிவித்து உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!