புத்தகத்தில் அமெரிக்க டாலரை மறைத்து வைத்து கடத்தி வந்த பயணி!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது.

இந்த விமானத்தில் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் வந்து இறங்கினார். அவரது உடைமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன.

அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர். அப்போது புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே அமெரிக்க டாலர் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

2 புத்தகங்களிலும் 90 ஆயிரம் அமொிக்க டாலர்களை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.73 லட்சம் ஆகும்.

கடத்தலுக்கு பல்வேறு நூதன வழிகள் கையாளப்படும் வேளையில், புத்தகங்களில் டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்த மற்றொரு நூதன முயற்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வெளிநாட்டு பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மும்பை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது.

அதில் வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில் அந்த பயணி உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த 2½ கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க பசையின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!