கூடைப்பந்து வீராங்கனையை விடுவித்த ரஷியா – ஆயுத வியாபாரியை விடுவித்தது அமெரிக்கா!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போரை தொடங்கியதும் முதல் நாடாக ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா பல்வேறு மேற்கத்திய நாடுகளையும் ரஷியாவுக்கு எதிராக அணி திரட்டியது.

இதன் காரணமாக அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக ரஷியா சென்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனா்ஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

உக்ரைன் போா் விவகாரத்தில் தங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகளை நீக்கச் செய்வதற்காக, கிரைனா்சை ரஷியா பிணைக் கைதியாக பயன்படுத்தும் என்று அச்சம் எழுந்தது. இதனால் கிரைனா்சை மீட்க வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ரஷிய அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியது. அப்போது ஆயுத வியாபார குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷியாவை சேர்ந்த விக்டர் பவுட்டை விடுவிக்க ரஷியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

போரை விரும்பும் மூர்க்கத்தனமான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் மரண வியாபாரி என்று அழைக்கப்படும் விக்டர் பவுட்டை விடுவிக்க அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில் 6 மாதங்களாக நடைபெற்ற கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பிரிட்னி கிரைனா்ஸ் மற்றும் விக்டர் பவுட் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இருவரும் விமானம் மூலம் அபுதாபி அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து தங்களின் தாயகத்துக்கு திரும்பினர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!