இருளில் மூழ்கிய உக்ரைன்… ரஷியாவின் அதிர்ச்சி அளிக்கும் அடுத்த கட்ட திட்டம்.?

உக்ரைன் மக்களை குளிர் காலத்தில் இருளில் மூழ்க செய்யும் திட்டத்துடன் பல மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி சேதமடைய செய்துள்ளன.

உக்ரைன் மீது, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். உக்ரைனின் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் குடியிருப்புகளும் சேதமடைந்து உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன.

எனினும், போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், கெர்சன், மரியுபோல் மற்றும் லிவிவ் உள்ளிட்ட பல நகரங்கள் ரஷிய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தன.

கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. எனினும், பல நகரங்களை ரஷியாவின் பிடியில் இருந்து சாமர்த்தியமுடன் செயல்பட்டு உக்ரைன் மீட்டது. இதன்படி சமீபத்தில், ரஷிய படையிடம் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டது.

தொடர்ந்து கடுமையாக சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும் அறிவிப்பை ரஷியா வெளியிட்டு அதன் படைகள் வெளியேறின.

இதனால், உக்ரைன் வெற்றியை நோக்கி செல்கிறது. போர் முடிவுக்கு வரவுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உற்சாகமுடன் கூறினார். ஆனால், இதற்கு மாறாக உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவர் கூறும்போது, ரஷியாவை சேர்ந்த 85 ஏவுகணைகள் வரை தாக்குதல் நடத்தி உள்ளன. அவற்றில் பல ஏவுகணைகள் எங்களது மின்சார உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலால், பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மின் இணைப்புகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு தாக்குதலில் இருந்தும், தப்பி மீண்டு வருவோம் என அவர் சூளுரைத்து உள்ளார்.

உக்ரைனின் மின்துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ, ராணுவ மற்றும் தூதரக முயற்சிகள் தோல்வி அடைந்த சூழலில், ரஷியாவின் பழிவாங்கும் மற்றொரு பயங்கரவாத முயற்சி என குறிப்பிட்டு உள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, 9 மாத ரஷிய படையெடுப்பில் இல்லாத வகையில் மின்துறை கட்டமைப்புகள் மீது மிக பெரிய அளவில் நடந்த வெடிப்பு தாக்குதல் என கூறியுள்ளார். குளிர்காலத்தில் எங்களுடைய ஆற்றல் சாதனங்களின் மீது பெரும் சேதம் ஏற்படுத்த ரஷியா முயற்சிக்கிறது என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ரஷியாவின் முந்தின தாக்குதல்களில் உக்ரைனின் மின் கட்டமைப்பில் 40 சதவீதம் முன்பே அழிக்கப்பட்டு விட்டன என மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடந்த வான்வழி தாக்குதலில் கீவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்து ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

ரஷிய ஏவுகணைகள் பொழிவால் உக்ரைனின் பல்வேறு பெரிய நகரங்களில் உள்ள முக்கிய மின்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து, லட்சக்கணக்கான மக்களை கொண்ட பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. அவற்றில் மேற்கே லிவிவ், வடகிழக்கே கார்கிவ் மற்றும் அவற்றுக்கு இடையே உள்ள பிற நகரங்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.

நேற்று மதியம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், மாலை தொடங்குவதற்கு முன்பு, ரஷியா தனது மீட்பு பணியாளர்களை, உக்ரைனின் நகரங்களில் சேத விவரம் பற்றி ஆய்வு செய்யும் பணிக்கு திருப்பி விட்டு இரவு நேரத்திலும் பணியில் ஈடுபட அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளது என தகவல் வெளிவந்து உள்ளது.

உக்ரைன் மக்களை குளிர் காலத்தில் இருளில் மூழ்க செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் முக்கிய பெருநகரங்களில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி அவற்றை சேதமடைய செய்துள்ளன.

இதுவரை மொத்தம் 15 மின் கட்டமைப்புகள் வரை சேதமடைந்து உள்ளன. 70 ஏவுகணைகள் தாக்குதலை நடத்தி உள்ளன என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. ரஷியாவின் இந்த அதிரடி தாக்குதல் தொடரலாம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதனால், உக்ரைனியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!