பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் டுவிட்டர்..!

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார்.

இதனை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அதில், 50 சதவிகிதம் பேரை கடந்த 4-ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக டுவிட்டர் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. ஒரே நாளில் டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து 50 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஊழியர் மத்தியிலும், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் வேலைக்கு வரும்படி டுவிட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலரிடம் தவறுதலாக பணி நீக்கம் செய்துவிட்டோம் மீண்டும் பணிக்கு வரும்படி டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சில ஊழியர்களின் வேலை மற்றும் அனுபவம் டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து எலான் மஸ்க் வைத்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் என்பதை உணராமல் டுவிட்டர் நிறுவனம் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மதிப்பை உணர்ந்து அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க டுவிட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்களில் 50 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்த டுவிட்டர் தற்போது அதில் சிலரை மீண்டும் பணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாகியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!