அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்தல்!

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் அண்மைக்காலமாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், கடத்தல் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் அந்நாட்டில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), அவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அக்குழந்தையின் மாமா அமன்தீப் சிங் (39) ஆகிய நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சில்லறை விற்பனையகங்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்த சாலையான தெற்கு நெடுஞ்சாலை 59 இல் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே ஆயுதங்களை வைத்திருந்த ஒருவரால் அக்குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நடந்து வருவதால் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களையும், மேலதிக தகவல்களையும் போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். அத்துடன், பாதிக்கப்பட்ட நபர்களையோ, சந்தேகிக்கப்படும் நபரையோ தற்போதைக்கு அணுக வேண்டாம் எனவும் ஷெரிப் அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம், மொட்டையடிக்கப்பட்ட தலையுடன், மாஸ்க் அணிந்த ஒருவரின் புகைப்படத்தை சந்தேகிக்கப்படும் நபராக ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதேபோன்ற சம்பவம் 2019 ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் துஷார் அத்ரே கலிஃபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது காதலியின் காரில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!