குழலி திரைவிமர்சனம்!

சாதிய படிநிலையில் இன்றளவும் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் விக்னேஷ் மற்றும் ஆரா பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஒரு பெண்ணை உயர் சாதி நபர் ஒருவர் காதல் என்ற பெயரில் கர்பமாக்கி அவளை ஏமாற்றி விடுகிறார். இந்த காதலை ஏற்காத அந்த உயர் சாதி வகுப்பினர் சம்மந்தப்பட்ட பெண்ணின் தந்தையை நாயை விட்டு கடிக்கவைத்து அவமானப்படுத்தி விடுகின்றனர்.

இதனை தாழ்த்தப்பட்ட வகுப்பில் நல்ல நிலமையில் இருக்கும் விக்னேஷின் தந்தை எதிர்த்து கேட்காததால் அச்சமுகத்தை சார்ந்தவர்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனிடையே இந்த இருவரின் காதலை எப்படியாவது ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர் பெண்ணுக்கு சம்மந்தப்பட்டவரிடம் இதுபற்றி முறையிடுகிறார்.

இதனால் இந்த விஷயம் பெண் வீட்டிற்கு தெரிய, கோபத்தில் இருக்கின்றனர். இந்த இருவரின் காதல் என்ன ஆனது? காதலை ஏற்க இவர்கள் என்ன செய்கின்றனர்? சாதிய பாகுபாட்டில் இருந்து எப்படி இவர்கள் மீள்கின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை. தமிழ் சினிமாவில் காலங்காலமாக தென்படக்கூடிய கதையை எடுத்துக் அதற்கு திரைக்கதை அமைத்து கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் செரா.கலையரசன்.

முதல் பாதியில் முழுக்க காதல் காட்சியும் இரண்டாம் பாதியில் சாதிய பிரச்சனையை கையாண்டிருக்கிறார். முதல் பாதியில் தென்படும் காதல் காட்சிகள் கதையோடு செல்லாமல் வெறும் காட்சிகளாக மட்டுமே தென்படுகிறது. தமிழக கிராமங்களில் இன்றளவும் நடக்கும் சாதிய பிரச்சனைகளை அழுத்தமாக சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டக்கூடியது.

சாதிய எதிர்ப்பை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லி கைத்தட்டல் பெறுகிறார் இயக்குனர். காக்கா முட்டை விக்னேஷ் அவனுடைய விடலைப்பருவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இனம்புரியாத பள்ளிப் பருவ காதலை அழகாக ஏற்று நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் ஆரா நாம் படித்த பள்ளி பருவ தோழியை நினைவுப் படுத்தும் அளவிற்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியின் அம்மாவாக வரும் செந்திகுமாரி, சாதியப் பெருமிதம் பேசும் இறுதிக்காட்சியில் செய்யும் செயல் அனைவரின் கைத்தட்டல் பெறுகிறது. மேலும் மஹா, ஷாலினி, அலெக்ஸ் உள்ளிட்ட அனைவரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

கிராமத்து பின்னணியை சமீரின் ஒளிப்பதிவு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அந்த மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் அழகு ஆனால் அது இடம்பெறுகின்ற இடங்கள் ரசிக்கும் படியாக இல்லை. மொத்தத்தில் குழலி – எதார்த்தம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!