சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர், இருவரது தந்தை என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் தீட்சிதர் சோமசேகர். இவரது 14 வயது மகள் தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 24 வயது தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் கடலூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் திருமணமான சிறுமி, மற்றும் அவரது தந்தையை நேற்றுமுன்தினம் கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் கடலூர் அழைத்து வந்தனர்.
பின்னர் அந்த சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் இது பற்றி சமூக நல துறையின் மகளிர் ஊர்நல அலுவலர் தவமணி, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (46), மேலும் சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!