ஒரு குடும்பத்தையே கொன்ற குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி..?

அமெரிக்காவில் ஹூஸ்டன் பகுதியில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூர முறையில் கொல்லப்பட்டு வீட்டின் வெவ்வேறு படுக்கை அறைகளில் கிடந்தனர்.

2014-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி நடந்த இந்த சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இதில் மாவோயி சன் (வயது 50), மிய்க்சி சன் (வயது 49), திமோதி சன் (வயது 9) மற்றும் டைட்டஸ் சன் (வயது 7) ஆகிய 4 பேர் படுகொலைக்கு குற்றவாளியின் மடத்தனமே காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொடூர படுகொலை பின்னணி பற்றி போலீசார் கூறும்போது, ஃபேங் லூ என்ற 58 வயதுடைய சீனர், தனது உயரதிகாரியான மாவோயி, தனது பணி உயர்வுக்கு பரிந்துரை செய்யவில்லை என நினைத்து உள்ளார். லூ, வேலை செய்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவுக்கு இடமாறுதல் பெற விரும்பியுள்ளார்.

இதற்காக தன்னை பற்றி நல்ல முறையில் எடுத்து கூறும்படி மாவோயி-யிடம் லூ கேட்டு கொண்டார். அதன்பின் லூ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்கள், லூவிடம் வித்தியாசமுடன் பழகியுள்ளனர்.

இதனால், லூவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தன்னை பற்றி மாவோயி ஏதேனும் அவதூறாக கூறியிருப்பாரோ? என சந்தேகம் வந்துள்ளது. அதனாலேயே தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் நினைத்து கொண்டார். இதனை கோர்ட்டில் போலீசார் சமர்ப்பித்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மீது நடந்த விசாரணையில், பேங் லூ-வே படுகொலைக்கு காரணம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். பதவி உயர்வு பற்றி மாவோயியுடன் லூ மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற விவரங்களை லூவின் மனைவி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்காக லூ துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், இதனை போலீசார் கூறியதும், என்னால் நம்ப முடியவில்லை என லூவின் மனைவி போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனால், ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழலுக்கு போலீசார் தள்ளப்பட்டனர். இந்த நிலையில், மாவோயி மீது தனக்கு கோபம் இருந்தது என்றும் ஆனால், அந்த படுகொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று லூ தொடர்ந்து போலீசாரிடம் மறுத்து வந்துள்ளார். எனினும், மாவோயி இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பர்ஸ் ஒன்றில் இருந்து மரபணு மாதிரிகளை சேகரித்த தடய அறிவியல் நிபுணர்கள் இந்த விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அதில், மரபணு மாதிரிகள் பேங் லூவுடன் ஒத்து போயிருந்தன. ஆனால், அதன் முடிவுகள் போலீசாரின் கைகளில் கிடைப்பதற்குள் லூ அமெரிக்காவில் இருந்து தப்பி சொந்த நாட்டுக்கு சென்று விட்டார். இதன் தொடர்ச்சியாக லூவை கைது செய்யவே முடியாது என்று நினைத்த தருணத்தில், 8 ஆண்டுகளுக்கு பின்பு, அமெரிக்காவின் கல்போர்னியா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!