மீண்டும் இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால்…

இரவில் சாப்பிட்டு முடித்ததும் மீதமாகும் உணவு பொருட்களை மறுநாள் பயன்படுத்தும் வழக்கம் நிறைய வீடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது சமையல் வேலையை குறைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துவதாக கருதுகிறார்கள்.

மறுநாள் பழைய உணவு பொருட்களை சூடுபடுத்தி உட்கொள்கிறார்கள். அது முதல்நாள் சாப்பிட்டதைவிட சுவையாக இருப்பதாகவும் நிறையபேர் நினைக்கிறார்கள். சில உணவு பொருட்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அத்தகைய உணவு வகைகள் பற்றி பார்ப்போம்.

முட்டை சில நிமிடங்களில் வெந்துவிடும். இருப்பினும் முட்டையில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் கொல்வதற்கு அதிக நேரம் தேவை. வேகவைத்த முட்டையை அறையின் வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும்போது அதில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பெருக தொடங்கிவிடும். அதனால் முட்டையை சமைத்த உடனே சாப்பிடுவதுதான் நல்லது.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். அதனை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரேட்டுகள் நைட்ரோசமைகளாக மாறி உடலுக்கு கேடுவிளைவிக்கும். பீட்ரூட்டை தொடர்ந்து சூடுபடுத்தி சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

உருளை கிழங்கை சமைத்தவுடன் சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் சமைத்த உருளைக்கிழங்கு குளிர்ச்சி அடையும்போது அதில் குளோஸ்டிரிடியம் போட்டுலிசம் எனும் பாக்டீரியா பரவும். அது உடல்நலக்கோளாறுக்கு வித்திடும்.

சமைத்த கோழி இறைச்சியிலும் சால்மோனெல்லா பாக்டீரியா பெருக தொடங்கும். அதனால் இறைச்சியை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது. சமைத்ததும் சாப்பிட்டுவிட வேண்டும்.

எண்ணெய்யில் தயார் செய்த பலகாரங்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடுபடுத்தும்போது பலகாரங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். மேலும் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றும்போது அது நச்சு நீராவியை வெளியிடும். அதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.

கடல் உணவுகளை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். நேரம் ஆக ஆக கடல் உணவில் விஷத்தன்மை ஏற்படக்கூடும். அதனால் மீண்டும் சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. கீரை வகைககளில் நைட்ரேட் அதிகம் கலந்திருக்கும். அதனை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரேட் கார்சினோஜெனிக் நைட்ரோசமைன்களாக மாறி அது புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!