இசியம் நகரில் தோண்ட தோண்ட கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள் – அதிகாரிகள் அதிர்ச்சி!

ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஷியப் படைகள் ஆக்கிரமித்திருந்த கிழக்கு உக்ரைனின் நகரமான இசியம் இப்போது உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரின் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கிழக்கு உக்ரைனின் இசியம் நகரில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. அங்கு 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைகுழியை உக்ரேனிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இறந்த உடல்கள் அனைத்திற்கும் தடயவியல் விசாரணை நடத்தப்படும். முன்னதாக தலைநகர் கீவ் அருகே புச்சா பகுதியில், பல நூறு உடல்கள் புதைக்கப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இப்போது மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இத்தனை பேர் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் இங்கு குவியலாக புதைக்கப்பட்ட இச்சம்பவத்திற்கு ரஷியா தான் காரணம் என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று உடல்கள் புதைகப்பட்ட தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று தெரிவித்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!