கோபமாக உள்ள மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?

இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும்.

அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும். கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

‘உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்’ என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும்.

அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட ‘தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே’ என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் ‘நீதான் காரணம்’ என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது ‘நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்’, ‘நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்’ என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

அதேபோல் தவறு நிகழும்போது, ‘நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது’ என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

மேலும் தவறு நடந்துவிட்டால், ‘எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?’ என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் ‘ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்’ என்று கடுமையாக திட்டுவதும் கூடாது. நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், ‘ஏன் எதுவும் பேசாமல் ‘உம்’மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

அதற்குப் பதிலாக ”நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?” என்று சொல்லிப் பாருங்கள். துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!