அதிகமாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள்…!

உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும்.

அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் நிறைய பேர் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதை கணக்கிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் பருகிக்கொண்டே இருப்பார்கள். அப்படி உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சோடியம் அளவில் மாறுபாடு ஏற்படும். தேவையற்ற நீரை வெளியேற்ற உடல் கட்டமைப்பு சிரமப்படும். அதன் காரணமாக வாந்தி, தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

நமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். தெளிவான வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி தெளிவான வெள்ளை நிறத்தில் வெளியேறுவது நீங்கள் அதிகபடியான தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். உடலில் நீரேற்றத்தை தக்கவைக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது போதுமானது. அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுதை உறுதி செய்ய வேண்டும்.

சிலர் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இரவில் தூங்கும்போதுகூட இந்த நிலை நீடிக்கும். தினமும் 10 தடவைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அது நீரிழப்பு பிரச்சினைக்கான அறிகுறியாகும். அதிகபடியான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்து செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மூளைக்கும் அழுத்தம் கொடுத்து தலைவலியை உண்டாக்கிவிடும்.

அதிகபடியான நீர் பருகும்போது உதடுகள், கைகள், கால்களில் நிறமாற்றம் அல்லது வீக்கம் ஏற்பட வழிவகுத்துவிடும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். உடலில் உள்ள அதிகபடியான நீரை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தொடர்ந்து சிறுநீரகங்கள் அதிகபடியான நீரை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேரும். உடலும் சோர் வடைந்துவிடும். அதிகபடியான தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் வீழ்ச்சி அடையும். அதன் காரணமாக தசை பிடிப்பு பிரச்சினை ஏற்படும். சிறுநீரகங்களால் அதிகபடியான நீரை வெளியேற்ற முடியாமல் போகும்போது குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதனால் தண்ணீரை தேவைக்கு மட்டும் பருகினால் போதுமானது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!