கடாவர் திரைவிமர்சனம்!

உடற்கூராய்வு மற்றும் தடய அறிவியல் துறை நிபுணராக இருக்கிறார் அமலாபால். நகரில் நடக்கும் தொடர் கொலைகளை பற்றி காவல் அதிகாரி ஹரீஸ் உத்தமன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக தடயங்களை அமலாபால் சேகரிக்கும்போது திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கிறது.

இறுதியில் கொலைகளை செய்வது யார்? கொலைக்கான காரணம் என்ன? அமலாபால் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அமலாபால் முதன் முதலில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாய்ஸ் கட்டிங் செய்யப்பட்ட தலைமுடி, கண்ணாடி நெற்றியில் விபூதி என்று ஆளே மாறிப்போயிருக்கிறார். மாணவர்களின் மருத்துவ படிப்பிற்காக தானமாகக் கொடுக்கப்படும் உடல்கள் தான் கடாவர் என்று சொல்லப்படுகிறது.

கூராய்வு செய்யப்பட்ட உடல்களுக்கிடையே டிபன் சாப்பிடும் அந்த வித்தியாசமான தோற்றத்தில் அறிமுகமாகிறார். நேரடியாக களத்தில் இறங்கி கொலையாளிகளை கண்டுபிடிப்பதும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அவசியமிருந்தும் அதை தவிர்த்து உணர்ச்சிகளை முகபாவங்களில் காட்டியிருப்பதும் அமலாபால் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார்.

கதாபாத்திரத்திற்காக தன் ஸ்டைலான நீண்ட தலைமுடியை வெட்டிக்கொண்டது எந்த கதாநாயகிகளும் செய்ய துணியாதது. வெகு இயல்பாக உடற்கூராய்வு செய்யும் காட்சிகளில் நடித்திருக்கிறார். கொலையாளிகளின் மேல் இருக்கும் கோபம், இளம்பெண் மீது இருக்கும் கருணை என்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனி நாயகியாக தன்னால் படத்தை தோளில் சுமக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அமலாபால்.

ஹரீஸ் உத்தமன் நிறைவாக செய்திருக்கிறார். முனீஸ்காந்த் வரும் இடங்களில் கதையோடு கலகலப்பும் செய்கிறார். நிழல்கள் ரவி சிறிது நேரம் வந்தாலும் நிறைவு. வேலு பிரபாகர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுல்யா ரவி குழந்தை முகத்தோடு வந்து கொடூர மடைவது பரிதாபம். ரித்விகா வழக்கம் போல் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

திரில்லர் கலந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜின் பின்னணி இசை படத்திற்கு பலம். ஐங்கிரி நந்தினி சுலோகம் சஸ்பென்ஸ் உச்சகட்டம். மொத்தத்தில் ‘கடாவர்’ திரில்லர் விருந்து.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!