பெற்ற தாயை கோவிலில் தவிக்கவிட்டு சென்ற மகன்!

கொப்பல் அருகே ஹூலிகி கிராமத்தில் புகழ்பெற்ற ஹூலிகெம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் நடை அடைக்கும் வரை 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மூதாட்டிக்கு உணவும், போர்வையும் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அவருக்கு வீட்டு முகவரி கூட சரியாக தெரியவில்லை. அவரது தனது பெயரை காசிம் பீ என்று கூறினார். மேலும் உஜ்ஜயனி கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

இதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை. மேலும் மகனுடன் கோவிலுக்கு வந்ததாகவும், அவர் தனது கையில் ஒரு செல்போனை கொடுத்துவிட்டு அழைப்பதாக கூறி சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் செல்போன் எண் எழுதிய காகிதம் ஒன்றையும் மகன் கொடுத்து சென்றதாகவும் அந்த மூதாட்டி பரிதாபமாக கூறினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூதாட்டி வைத்திருந்த காகிதத்தை வாங்கி பார்த்தனர். அதில் செல்போன் எண் இல்லாமல் வெற்று காகிதமாக இருந்தது. மேலும் செல்போனை வாங்கி அதில் உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ள முயன்றனர்.

ஆனால் செல்போனில் சிம்கார்டும் இல்லை. இதனால் மூதாட்டியின் மகன், அவரிடம் சிம்கார்டு இல்லாத செல்போன் மற்றும் வெற்று காகிதத்தை கொடுத்துவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும் பாரமாக கருதி பெற்ற தாயை வேண்டுமென்றே அவரது மகன் விட்டு சென்றது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் முனிராபாத் போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியை மீட்டு முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து முனிராபாத் போலீசார், பெற்ற தாயை கோவிலில் தவிக்கவிட்டு சென்ற கல்நெஞ்சம் கொண்ட மகன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!