சைக்கிளில் 22 ஆண்டாக பணிக்கு செல்லும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

இந்த அவசர காலத்தில் சைக்கிளில் பயணம் செய்வதை சிலர் கவுரவ குறைவாக நினைத்து வரும் நிலையில் சென்னையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 22 ஆண்டுகளாக சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை எம்.எஸ்.நாயுடு கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பராணி (44). இவர் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தினமும் இவர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை சாலையில் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தனக்கே உரிய பாணியில் போலீஸ் சீருடையில் சைக்கிளில் செல்வதை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். இதுபற்றி சிலர் அவரிடம் கேட்கும் போது கடந்த 22 ஆண்டுகளாக பணிக்கு சைக்கிளில் சென்று வருவதாக பெருமிதத்துடன் கூறுவதை கேட்டதும் வாயடைத்து போய் உள்ளனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் போலீஸ் பணியை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கினேன். 2001-ம் ஆண்டு ஆயுதப்படையில் பணியாற்றிய நாள் முதல் இன்று வரை நான் வசிக்கும் வீட்டில் இருந்து பணிபுரியும் போலீஸ் நிலையம் வரை சைக்கிள் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன்.

எனது தந்தை கோவிந்த சாமி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் பணிபுரிந்த காலங்களில் எங்களது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் வரை சைக்கிளில் சென்று வருவார். இதனால் அவரது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இன்று வரை உள்ளது. அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது.

இதுவரை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதுநாள் வரை கண்ணாடி அணியாமல் பத்திரிகை படித்து வருகிறார். இதுவே எனக்கு உந்துதலாக அமைந்தது. அவரது வழியில் நானும் சைக்கிளில் பணிக்கு சென்று வருகிறேன்.

நான் இந்த காவல் பணியில் 22ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். இதுவரை பல்லாவரம், மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்ட ஒழுங்கு, குற்றப்பிரிவு, என பணிபுரிந்துள்ளேன். தற்பொழுது கடந்த மே மாதம் நான் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பூக்கடை சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறேன்.

எனது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் இருக்கும். தினமும் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருகிறேன். அவ்வப்போது தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது பணிபுரியும் போலீஸ் நிலையத்தில் இருந்து பாரிமுனை, திருவொற்றியூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சைக்கிளிலேயே சென்று வருவேன்.

இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட எந்தவிதமான உடல் பிரச்சினையும் இன்றி ஆரோக்கித்துடன் உள்ளேன். சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். அவர்களும் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவதை ஊக்குவித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!