‘பட்டாம்பூச்சி’ திரைவிமர்சனம்!

நடிகர்: சுந்தர் சி, ஜெய்

நடிகை: ஹனி ரோஸ்

டைரக்ஷன்: பத்ரி நாராயணன்

இசை: நவ்நீத்

ஒளிப்பதிவு : பென்னி ஆலிவர்

பட்டாம்பூச்சி படமானது 1980களின் பின்னணியில் ஒரு கிரைம் த்ரில்லர். ‘சைக்கோ’வுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டமே ‘பட்டாம்பூச்சி.’ பத்ரி இயக்கி, சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி நடித்த படம்.

இது ஒரு ‘சைக்கோ’ ஆசாமியை பற்றிய கதை. ஜெயிலில் இருக்கும் ‘சைக்கோ’ கொலைகாரன் ஜெய், பத்திரிகை நிருபர் விஜயலட்சுமியை அழைத்து வந்தால், அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று போலீஸ் அதிகாரிகளிடம் நிபந்தனை விதிக்கிறார். விஜயலட்சுமி வரவழைக்கப்படுகிறார். அவரிடம், கொலைகாரன் ஆனது எப்படி என்று ஜெய் தனது முன்கதையை சொல்கிறார்.

அவருடைய தந்தை ஒரு முரடர். மகன் என்ற பாசம் இல்லாமல் ஜெய்யை அடிக்கடி அடித்து உதைக்கிறார். செய்யாத கொலைக்கு ஜெய் குற்றவாளி என்ற பழி சுமந்து ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அந்த கொலைக்கு பின், 7 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்கிறார்.

7 கொலைகளை செய்த பட்டாம்பூச்சி கொலைகாரன் ஜெய்தானா என்று போலீசாரும், பொதுமக்களும் ஆச்சரியப்படுகிறார்கள். பட்டாம்பூச்சி கொலைகாரனை பற்றிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அந்த பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் சி.யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த கொலை வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. ஜெய் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கோர்ட்டு அவரை விடுதலை செய்கிறது. வெளியே வந்த ஜெய் என்ன ஆகிறார்? போலீஸ் அதிகாரி சுந்தர் சி.யின் நிலைமை என்னவாகிறது? என்பது மீதி கதை. போலீஸ் அதிகாரி வேடத்தில் சுந்தர் சி. கச்சிதம். ஆணழகன் பட்டம் வாங்கியவர் போல் சண்டை காட்சிகளில் கம்பீரம். ஜெய்யை சுலபமாக தூக்கி வீசுகிறார்.

இவர் ஜெய்யை துரத்தும் காட்சிகள், இருக்கை நுனியில் உட்கார வைக்கின்றன. நன்றாக சவரம் செய்யப்பட்ட முகத்துடன் கதாநாயகன் போல் வரும் ஜெய்யை குற்றவாளி அல்லது கொலைகாரன் என்று நம்பமுடியவில்லை. நடிப்பிலும் குரூரம் காட்டவில்லை. கதாநாயகி ஹனிரோஸ் ஒரு சிறுமிக்கு தாயாக நடித்து இருக்கிறார். பாடல், டூயட் என கதாநாயகிக்கே உரிய காட்சிகள் இல்லையென்றாலும், ஜெய்யினால் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில், பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.

இமான் அண்ணாச்சிக்கு நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம். கொலைகாரனிடம் இருந்து தன்னையும், மகளையும் காப்பாற்றிக்கொள்ள உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடும் காட்சியில், திக்…திக்…திகில்.

நவ்நீத் சுந்தரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வேகம் சேர்க்கிறது. பத்ரி டைரக்டு செய்து இருக்கிறார். ஒவ்வொரு கொலையையும் ஜெய் செய்துவிட்டு தப்பிப்பது போலவும், அதன் பிறகே சுந்தர் சி. வந்து நின்று வருத்தப்படுவது போலவும் உள்ள காட்சி, கதையோட்டத்துக்கு தடை. படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி வேகமும், விறுவிறுப்புமாக சூப்பர் திரைக்கதை.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!