இரவில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணன் மகளைக் கண்டித்த வாலிபரை அவரது அண்ணனே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராசு(32). இவர் மெட்ரோ வாட்டரில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கனகா என்ற மனைவியும், மகாலட்சுமி(5) என்ற மகளும் உள்ளனர்.
இவரது மகள் மகாலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். ராசுவும், அவரது தம்பி சந்திரன் என்ற விக்கி(19) என்பவரும் ஓரே வீட்டில் வசித்து வந்தனர்.
கூலி வேலை பார்த்து வந்த விக்கி நேற்று இரவு 10.30 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த விக்கி உடனே குழந்தை மகாலட்சுமியிடம் இருந்து செல்போன் பறித்ததுடன் அவரை அடித்துள்ளார். இதில் கோபமடைந்த ராசு, விக்கியிடம் எதற்காக குழந்தையை அடித்தாய் ஏன் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது விக்கியை அடித்து உதைத்ததுடன் பெல்ட்டால் கழுத்தை நெரித்து ராசு கொலை செய்தார். தகவலறிந்து அங்கு வந்த நொலம்பூர் போலீஸார் விக்கி உடலை கைப்பற்றி கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கொலைவழக்கு பதிவு செய்து ராசுவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் குழந்தை செல்போனில் விளையாடுவதைக் கண்டித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: kamadenu.hindutamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!