சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு மரண தண்டனை..? அமெரிக்கா கடும் கண்டனம்!

உக்ரைனில் காணாமல் போன மூன்று அமெரிக்க தன்னார்வலர்களில் இருவர் ரஷிய ஆதரவு பிரிவினைவாத சக்திகளால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 27 வயதான ஆண்டி டாய் என்கோக் ஹுய்ன் ஆகியோர் டொனெட்ஸ்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் கார்கிவ் நகருக்கு வடக்கே நடந்த போரின் போது இரண்டு அமெரிக்கர்களும் காணாமல் போனார்கள்.

உக்ரைனுக்கு ஆதரவாக வெளிநாட்டு கூலிப்படைகள் களத்தில் இருப்பதாக குற்றம் சாட்டி வரும் ரஷியா அதனை உறுதிப்படுத்தும் வகையில் பலரை சிறைபிடித்து வைத்துள்ளது. இவர்களில் பிரிட்டன் மற்றும் மொரோக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிடிபட்டுள்ள அமெரிக்க முன்னாள் படை வீரர்களுக்கும் மரண தண்டனை கிடைக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ரஷிய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.

பிடிபட்ட இரண்டு அமெரிக்க தன்னார்வலர்கள், ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் இல்லை, இதனால் அவர்கள் இருவரும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். மரண தண்டனைக்கு ஆளானவர்கள் அனைவரும் உக்ரேனிய ஆயுதப் படைகளுடன் பணியாற்றினர், அதாவது அவர்கள் போர்க் கைதிகளாகக் கருதப்பட வேண்டும். பிடிபட்டவர்கள் அமெரிக்க பிரஜை என்றாலும் வெளிநாட்டு கூலிப்படை என்ற அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!