மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் நடத்திய நூதன வழிபாடு!

மராட்டியத்தில் ‘வட் பூர்ணிமா’ நாளில் பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், 7 ஜென்மத்திற்கு தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டும் எனவும் ஆலமரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி வட்பூர்ணிமா தினமான நேற்று பெண்கள் ஆலமரத்தை சுற்றி வந்து வழிபட்டனர். அதேநேரத்தில் அங்குள்ள அவுரங்காபாத்தில் ஆண்கள் அரச மரத்தை சுற்றி வந்து நடத்திய நூதன வழிபாடு பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் தங்கள் மனைவிக்காக மரத்தை சுற்றி வரவில்லை.

தற்போது உள்ள மனைவி, மீண்டும் எந்த ஜென்மத்திலும் தங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடக்கூடாது என 108 முறை அரச மரத்தை சுற்றி வந்து வேதனையை வெளிப்படுத்தினர். மேலும் குடும்பத்தில் ஆண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் மனைவி மீது அதிருப்தியில் உள்ள ‘பத்னி பீதித்’ (மனைவியால் பாதிக்கப்பட்டவர்கள்) என்ற சங்கத்தை நடத்தி வருபவர்கள் ஆவர். இந்த தூதன வழிபாடு குறித்து பத்னி பீதித்தின் நிறுவனர் பாரத் புலாரே கூறுகையில், “பெண்களுக்காக பல சட்டங்கள் உள்ளன. அதை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே ஆண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிக்காகவும் சட்டம் இயற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதற்காக நாங்கள் இந்த நூதன வழிபாட்டை நடத்தி விழிப்புணர்வு செய்தோம்” என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!