கல்யாணத்தின் பின் மகிழ்ச்சி சேர்க்கும் குணாதிசயங்கள்!

கணவன் – மனைவி இடையேயான பரஸ்பர புரிதலை பொறுத்தே திருமண பந்தம் வலுப்படும். இன்பம், துன்பம், துக்கம், சுகம், வெற்றி, தோல்வி போன்ற கலவையான சூழல்களை எப்படி கையாள் கிறார்கள் என்பதை பொறுத்தும் இருவருக்குமிடையேயான உறவு பிணைப்பு கட்டமைக்கப்படும்.

ஜாதக பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை விட இருவருக்குமிடையே மன பொருத்தம் எப்படி அமைந்திருக்கிறது என்பதில்தான் இல்லறத்தின் இனிமை அடங்கி இருக்கிறது. இருவருடைய குணாதிசயங்களும் ஒத்திருக்க வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் பரிவு, அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தனி மனித சுதந்திரம், சுய மரியாதை, உரிமை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப கணவன் – மனைவி இருவரின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

மகிழ்ச்சியான தருணமே இல்லறத்திற்கு இனிமை சேர்க்கும். திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்பாராதவிதமாக மகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தால் அதனை இருவரும் உணர்வுப்பூர்வமாக ரசித்து மகிழலாம். அப்போது இந்த மகிழ்ச்சிக்கு யார் காரணம்? என்பது பற்றி விவாதிப்பதில் தவறில்லை. ஆனால் தான் மட்டுமே அதற்கு காரணம் என்ற கர்வம் இருவருக்கும் எழுந்துவிடக்கூடாது. மகிழ்ச்சியான தருணத்தை இருவரும் மன நிறைவோடு அனுபவித்தாலே உறவு வலுப்படத்தொடங்கிவிடும். அதைவிடுத்து, ‘தன்னால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது’ என்ற எண்ணம் உறவை சிதைத்துவிடும்.

குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகளைத்தான் தேட வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைக்கு யார் காரணம் என்று சிந்திக்கக்கூடாது. சம்பந்தப்பட்டவரிடம், ‘நீ தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். உன்னால்தான் என் நிம்மதியே கெட்டுப்போகிறது’ என்று குற்றம் சாட்டுவது கூடாது. அது ஒட்டுமொத்த குடும்ப நிம்மதியையுமே சீர்குலைத்துவிடும். உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது. மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேச வேண்டும். உணர்வுகளை நேர்மையாக வெளிப் படுத்தவும் வேண்டும். அதுதான் துணை மீது நம்பிக்கையை வளர்த்தெடுக்கும். கணவன் – மனைவி இடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது.

கணவன் – மனைவி இருவரில் யாரேனும் மன குழப்பத்துடனோ, ஏதேனும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்புடனோ இருக்கும்போது ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உடன் இருந்து உதவிகரமாக செயல்பட வேண்டும். இந்த குணாதிசயம்தான் உறவு பாலத்தை வலுவாக்க உதவும்.

கணவன் – மனைவி இருவருக்குள் ‘நான் பெரியவன். நீ சாதாரணமானவன்’ என்ற எண்ணம் ஒருபோதும் எழக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், மரியாதை கொடுத்தல் என அனைத்திலும் சமமாக நடந்துகொள்ள வேண்டும். தன்னை மதிப்பு, மரியாதையுடன் நடத்துகிறார் என்ற எண்ணம் துணையின் ஆழ் மனதில் பதிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப கணவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.

தம்பதியருக்குள் எந்தவொரு சூழலிலும் கருத்து மோதல் எழுந்துவிடக்கூடாது. அன்பும், அக்கறையும், அரவணைப்பும் எப்போதும் பின்தொடர வேண்டும். அவை எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாததாகவும் அமைந்திருக்க வேண்டும். அதுவே உறவை வலுப்படுத்தும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போதும், முக்கியமான முடிவுகளை எடுக்கும்போதும் அதில் இருவரின் பங்கீடும் இருக்க வேண்டும்.

அப்போதுதான் தனக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற எண்ணம் துணையிடம் நிலைத்திருக்கும். இருவரும் சமமாக மகிழ்ச்சியை உணர முடியும். அதைவிடுத்து ‘எல்லாமே என்னால்தான் நடக்கிறது. நீ எதுவுமே செய்யவில்லை’ என்று கூறுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல உறவையும் சிதைக்க ஆரம்பித்துவிடும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தவறு நடப்பது இயல்புதான். அப்படி தவறு நிகழும் பட்சத்தில் அதனை ஒப்புக்கொள்ளும் பக்குவம் இருவரிடமுமே இருக்க வேண்டும்.

அதுதான் இருவருக்குமிடையே சரியான புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கும். வீட்டில் மட்டுமல்ல பொது இடங்கள், உறவுகள் கூடும் இடங்களில் துணைக்கு உரிய மதிப்பு, மரியாதையை கொடுக்க வேண்டும். எங்கும் சம உரிமை கொடுப்பதன் மூலம் துணை மீதான மதிப்பும் உயரத்தான் செய்யும். அதனை நினைவில் கொள்ள வேண்டும். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் ஒரே விதமான மனோ பாவத்துடன் அணுகும் பக்குவம் கொண்டவர்களாக இருவரும் இருக்க வேண்டும். இந்த குணாதிசயம் வாழ்க்கையில் எப்போதும் நிம்மதியை தழைத்தோங்க செய்யும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!